கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்கக்கோரி கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், 'கர்நாடக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கர்நாடகாவில் தமிழ் வழியாக கல்வி கற்கும் தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும். கர்நாடகாவில் அண்மையில் மூடப்பட்ட தமிழ் வழிப்பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய தமிழ் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கவும்' தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி இன்று (அக். 08) கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எழுதிய கடிதத்தின் முழு விவரம்:

``கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக, தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் வழியில் கல்வி கற்க கர்நாடக அரசு, பள்ளிகளைத் தொடங்கி நடத்தி வருகின்றது. இத்தகைய தனியார் பள்ளிகளுக்கான ஒப்புதல் மற்றும் மானியம் ஆகியவற்றையும் கர்நாடக அரசு வழங்கி வருகின்றது.

இந்நிலையில், கர்நாடகாவில் பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை எனவும், தமிழ்வழியில் கல்வி கற்பதற்கான புதிய தனியார் பள்ளிகளைத் தொடங்க கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கவில்லை எனவும், கர்நாடகா தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

கர்நாடக மாநில வளர்ச்சிக்காக தமிழர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். முக்கியமாக, கோலார் தங்கச்சுரங்கம், ஹட்டி தங்கச்சுரங்கம், சந்தூர் மாங்கனீஸ் சுரங்கம், சிக்மகளூரு, மங்களூரு ஆகிய பகுதிகளில் உள்ள காபி எஸ்டேட்டுகளின் வளர்ச்சிக்காக முக்கியப் பங்காற்றியுள்ளனர். மேலும், கட்டிடத் தொழில்கள், விவசாயம் ஆகியவற்றிலும் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.

எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

1. கர்நாடகாவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள தமிழாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

2. சமீபத்தில் மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும்.

3. தமிழ் வழியில் படிக்கத் தனியார் பள்ளிகளைத் தொடங்க ஒப்புதல் அளிக்க வேண்டும்.

4. வேறு மொழிவழிப் பள்ளிகளாக மாற்றப்பட்ட பள்ளிகளை மீண்டும் தமிழ்வழிப் பள்ளிகளாக மாற்ற வேண்டும்"

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.