காதலுக்கு கொழுந்தியா எதிர்ப்புத் தெரிவித்ததால், திருமணத்திற்குப் பின் வீட்டிற்கு வந்த கொழுந்தியாவின் மகனை காதலன் கரண்டியால் அடித்துக்கொன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்த அருண் குமார் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமியின் சகோதரியான இளம் பெண் பவானியை காதலித்து வந்து உள்ளார். பதிலுக்கு, பவானியும் அருண் குமாரை காதலித்து வந்துள்ளார். இந்த விசயத்தைக் கேள்விப்பட்ட பவானியின் சகோதரி பாக்கியலட்சுமி, தங்கையின் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.

அத்துடன், தன் பேச்சைத் தங்கை பவானி கேட்காமல், அருண் குமாருடன் தொடர்ந்து பழகி வந்ததால், ஆத்திரமடைந்த பாக்கியலட்சுமி, தங்கையின் காதலன் அருண் குமாரிடம் சண்டைக்குச் சென்று, அவரை கண்டித்து உள்ளார். இதனால், பாக்கியலட்சுமி மீது அருண் குமாருக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், அடுத்த சில மாதங்களில் இளம் பெண் பாவனி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், காதலன் அருண் குமார் அவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, ஆவடி ராஜீவ் காந்தி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த புதுமண காதல் ஜோடி தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, இளம் பெண் பவானி, தனது சகோதரி பாக்கியலட்சுமியை போனில் தொடர்பு கொண்டு, அவரை தொடர்ச்சியாகச் சமாதானப்படுத்தி உள்ளார். சகோதரி மீது இருந்த பாசத்தால், பாக்கியலட்சுமியும், தனது தங்கை பவானியை பார்க்க அவரது வீட்டிற்குத் தனது 2 வயது மகனையும் அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.

தங்கை வீட்டிற்கு வந்ததும், வீட்டின் உள்ளே பவானியும் - பாக்கியலட்சுமியும் சேர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, பாக்கியலட்சுமியின் 2 வயது மகன் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்து உள்ளான்.

அந்த நேரம் பார்த்து, கடுமையான மது போதையில் வீட்டிற்கு வந்த அருண் குமார், கொழுந்தியாவின் மகன் 2 வயது சிறுவன் விளையாடிக்கொண்டு இருப்பதைப் பார்த்து கடும் ஆத்திரமடைந்து உள்ளான். இதனையடுத்து, அங்கு கிடந்த கரண்டியை எடுத்து, அந்த 2 வயது சிறுவனின் தலையில் தாக்கி உள்ளார். இதில், ரத்த வந்த நிலையில், அந்த சிறுவன் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்து உள்ளான்.

இதனையடுத்து, உயிரிழந்த சிறுவனைத் தூக்கிக்கொண்டு அருண் குமார் சத்தம் போட்டு உள்ளார். அப்போது, வீட்டிற்குள் பேசிக்கொண்டிருந்த மனைவி பவானியும் - கொழுந்தியா பாக்கியலட்சுமியும் வெளியே ஓடி வந்து சிறுவனின் தலையில் ரத்தம் இருப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து என்ன நடந்தது என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவனோ, “சிறுவன் படியிலிருந்து தவறி விழுந்துவிட்டான்” என்று கூறி உள்ளார். இதனையடுத்து, எழுப்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்குத் தீவிரமாக சிகிசை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்தார்.

மேலும், “குழந்தை மாடிப்படியில் தவறி விழுந்ததால் ஏற்பட்ட காயம்  இது இல்லை என்றும், யாரோ சிறுவனைப் பலமாகத் தாக்கி இருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட காயம் இது” என்றும், போலீசாரிடம் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அருண் குமாரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து தங்களது பாணியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, “நாங்கள் காதலிக்கும் போது எனது கொழுந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த கோபத்தில் மது போதையில் இருந்த நான் அந்த சிறுவனை அடித்துக் கொன்று விட்டேன்” என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளான்.

இதனையடுத்து, அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவனை சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.