சேலம் அருகே விவாகரத்தான இளம் பெண் மீண்டும் காதலனால் ஏமாற்றப்பட்டதால், காதலன் வீட்டின் முன்பு விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்து உள்ள ஆணையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான அனிதா, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, கணவனை விட்டுப் பிரிந்து உள்ளார். அதன் பிறகு, நீதிமன்றம் சென்று முறைப்படி விவாகரத்து பெற்ற அனிதா, தனது பெற்றோருடன் வசித்து வந்து உள்ளார். 

இதனிடையே, சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. தனியார் பயிற்சி மையத்திற்குச் சென்ற போது, அங்குப் படிக்க வந்த 27 வயதான விக்னேஷ் என்பவர், அனிதாவுக்கு அறிமுகம் ஆனார். இருவரும் நட்பாகப் பழகி வந்த நிலையில், நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.

கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், தனது பெற்றோர் மூலம் அனிதாவைப் பெண் கேட்க வரப் போவதாக விக்னேஷ் கூறி உள்ளார். 

இதனையடுத்து, அடுத்த சில நாட்களில் விக்னேஷ், தன் காதலி அனிதாவுடன் இருந்து அவர் திடீரென விலகத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. காதலன் விக்னேஷிடம் பேச அனிதா எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும், அவரால் முடியவில்லை. இதனால், இருவருக்கும் பொதுவான நண்பர்கள் மூலம் பேசுவதற்குத் தூது விட்டுள்ளார். அதுவும் பலன் அளிக்க வில்லை. இதனையடுத்து, காதலன் வீட்டிற்கே நேரடியாகச் சென்ற அனிதா, “தன்னை விக்னேஷின் காதலி” என்று அறிமுகம் செய்து உள்ளார். ஆனால், விக்னேஷின் பெற்றோர், “தன் மகன் வீட்டில் இல்லை என்றும், அவன் வெளியூர் சென்றிருப்பதாகவும் கூறி” அனிதாவை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், வீட்டில் தன் காதலனை மறைத்து வைத்துக் கொண்டு, இல்லை என்று அவரின் பெற்றோர் கூறுவதாகக் கோபமடைந்த அனிதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு, கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், “காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்” என்றும் அவர் புகாரில் கூறியிருந்தார். ஆனால், போலீசார் அனிதாவின் புகார் குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அனிதா, நேற்று மதியம் 2 மணி அளவில் விக்னேஷ் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

அப்போதும், அனிதாவின் பெற்றோர் எந்த சமாதானமும் செய்யவில்லை என்பதால், கையில் வைத்திருந்த விஷத்தை திடீரென அருந்தி மயங்கி விழுந்து உள்ளார். இதனையடுத்து, அங்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அனிதாவை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு, அனிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, சிறிது நேரத்தில் அனிதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கெங்கவல்லி போலீசார், தலைமறைவாக உள்ள விக்னேஷை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, விவாகரத்தான இளம் பெண் ஒருவர், மீண்டும் காதலில் ஏமாற்றம் அடைந்த நிலையில், காதலன் வீட்டின் முன்பு விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.