ஆவடி புனித அந்தோணியார் திருத்தலத்தின் 73வது ஆண்டு விழா… முக்கிய நிகழ்வுகளின் விவரம் இதோ!

ஆவடி புனித அந்தோணியார் திருத்தலத்தின் 73வது ஆண்டு விழா… முக்கிய நிகழ்வுகளின் விவரம் இதோ! - Daily news

ஆவடி புனித அந்தோணியார் திருத்தலத்தின் 73வது ஆண்டு விழா ஜூன் மாதம் 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்பாக நடைப்பெற்று வருகின்றன. தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக திகழ்வது புனித அந்தோணியார் திருத்தலம். கடந்த 1958 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட 1959 ஆம் ஆண்டு முழுவதுமாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த 2023ம் ஆண்டு ஆவடி புனித அந்தோணியார் திருத்தளத்தின் 73 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளையும் ஆவடி புனித அந்தோணியார் திருத்தலத்தின் வரலாற்றையும் குறிப்பிட்டு சொல்லும் வகையில் திருத்தலத்தின் சார்பில் தற்போது அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

"தொடக்க காலத்தில் ஆவடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் கிறிஸ்தவம் விதைக்கப்பட்டிருந்தாலும், அது ஆழமாக வேரூன்றாமல் காலப்போக்கில் கிறிஸ்தவ படைவீரர்களின் ஆன்மீக தேவையை நிறைவு செய்யக்கூடிய ஒன்றாகவே திகழ்ந்தது. 1943-ம் ஆண்டு அருள்தந்தை. ஜாண் வென்னார்ட் அவர்களின் கடின உழைப்பாலும், எளிமையான வாழ்க்கையாலும் ஈரக்கப்பட்டு ஆவடி, காமராஜ் நகர், பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளை சுற்றியுள்ள மக்கள் கிறிஸ்தவ மதத்தை தழுவினர். இந்த கிராமங்களில் உள்ள பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை கண்ட அருள்தந்தை இறைமக்களின் ஆன்மீக தேவைகளை நிறைவு செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், 1950-ம் ஆண்டு குழந்தைகளுக்கு தமிழ்வழிக் கல்வியை ஆரம்பித்தார். 

இறைமக்களின் ஆன்மீக தேவைகளை உணர்ந்து, 1958-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் நாள் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு லூயிஸ் மத்தியாஸ் ஆண்டகை அவர்களால் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, ஆலய பணிகள் அனைத்தும் முடிந்து 1959-ம் ஆண்டு ஜீலை மாதம் 5-ம் நாள் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட இணை ஆயர் மேதகு பிரான்சிஸ் கார்வாலோ அவர்களால் புனிதப்படுத்தி திறந்து வைக்கப்பட்டது. ஆவடி புனித அந்தோணியார் ஆலயமானது 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ம் நாள் சென்னை மயிலை பேராயர் மேதகு யு.ஆ. சின்னப்பா அவர்களால் திருத்தலமாக அறிவிக்கப்பட்டது.

புனித அந்தோணியாரின் புதுமைகளால் நிரம்பி வழியும் இத்திருத்தலத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் சாதி, மதங்களை கடந்து வருவது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான அற்புதங்களும், அதிசயங்களும் புனிதரின் பரிந்துரையால் இத்திருத்தலத்தில் நடந்து கொண்டிருக்கிறது.மேலும் பெற்ற நன்மைகளுக்கு நன்றியாக மெழுகுவர்த்தி ஏற்றுதல், மாலை அணிவித்தல், உலோகத்தினாலான உடல் உறுப்புகள் காணிக்கை போன்றவை புனிதரின் அருளுக்கு சான்றாக அமைகிறது. எனவே ஆவடி புனித அந்தோணியார் திருத்தலம் வாருங்கள். நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும் என்பதே இத்திருத்தலம் தரும் இறையாசீர். இந்த ஆண்டு  ஆவடி புனித அந்தோணியார் திருத்தலத்தின் 73வது ஆண்டு விழா வருகின்ற ஜூன் மாதம் 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்பாக கொண்டாடவிருக்கின்றோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 

இந்த ஆண்டு விழாவின் முக்கிய நிகழ்வுகள்:

13.06.2023 மாலை 06.00 மணி - திருக்கொடியேற்ற பெருவிழா
16.06.2023 மாலை 06.00 மணி - நற்கருணை பெருவிழா
17.06.2023 மாலை 06.00 மணி - தேர்த்திருவிழா
18.06.2023 மாலை 06.00 மணி - திருக்கொடியிறக்கம்

இந்த முக்கிய நிகழ்வுகளில் பங்குபெற்று கோடி அற்புதர் புனித அந்தோணியாரின் ஆசீர் பெற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்."
 
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment