ஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக பிரமுகர் ஒருவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 

நாடு முழுவதும் கொரோனா என்னும் பெருந் தொற்று பரவி வரும் அதே வேளையில், பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் கடந்த மாதம் செய்திகள் வெளியானது. 

தற்போது, அது உண்மை தான் என்று சொல்லும் வகையில், சிறுமிக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய தேசிய கட்சியின் அரசியல் பிரமுகர் ஒருவரே கைது செய்யப்பட்டிருப்பது வேதனை அளிக்கும் வகையில் உள்ளது.

சென்னை ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். 

இதனைத் தெரிந்துகொண்ட கொள்ளுமேடு, செங்குன்றம் சாலையில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் 45 வயதான சீனிவாசன், கடந்த 4 ஆம் தேதி அன்று, காம வெறியில், சிறுமியின் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்துள்ளார்.

வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைத்த அவர், சிறுமியை மிரட்டி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமி, பெற்றோர் வீடு திரும்பும் வரை, வீட்டில் அழுதுகொண்டே இருந்துள்ளார். மேலும், ஒரு வித பயத்துடனும், பதற்றத்துடன் அவர் காணப்பட்டுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் மாலை வீடு திரும்பிய நிலையில், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து, பெற்றோரிடம் அவர் அழுதுகொண்டே கூறி உள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக அங்குள்ள ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாகக் காவல் நிலைய ஆய்வாளர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டார். அத்துடன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சீனிவாசன் பாஜகவில் ஒரு முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், போலீசார் தம்மைத் தேடுவதை அறிந்த அந்த அரசியல் பிரமுகர் தலைமறைவானார். இதனையடுத்து, அவரது செல்போன் நம்பரை வைத்து, போலீசார் அவரை தற்போது அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாஜக பிரமுகர் ஒருவரே தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், ஆவடி பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.