கேரளாவில் தரையிறங்கும் போது ஓடு பாதையில் மோதிய விமானம் 2 துண்டுகளாக விபத்துக்கு உள்ளானதில் இது வரை 19  பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலையிழந்து தவித்து வந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் எந்த வித போக்கு வரத்து வசதியும் இன்றி தவித்து வந்தனர். இதன் காரணமாக, வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து மீட்டு வரப்பட்ட இந்தியர்கள் கேரளா திரும்பினர்.

அந்த ஏர் இந்தியா B737 விமானத்தில், 10 குழந்தைகள் உள்பட 185 இந்திய பயணிகள் இருந்துள்ளனர். அத்துடன், 2 விமானிகள், 4 பணிப்பெண்கள் என மொத்தம் 191 பேர் அதில் இருந்துள்ளனர். 

துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு விமானமானது, இரவு 7.45 மணி அளவில் கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்க முயன்றது. அந்த நேரத்தில், அங்குப் பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. இதனால், விமானம் ஓடுபாதையில் தரை இறங்கியதும், எதிர்பாராத  விதமாக ஓடு பாதையில் மோதி உள்ளது. இதனால், ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு வேகமாக விமானம், ஓடித் தொடங்கியதால், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையைத் தாண்டிச் சென்று அருகில் உள்ள 35 அடி பள்ளத்தில் பயங்கர சத்தத்துடன் விழுந்து நொறுங்கியது. இதில், அந்த விமானம் 2 
துண்டுகளாக உடைந்தது. 

இதனால், விமானத்தில் இருந்த ஒட்டு மொத்த பயணிகளும் அலறித் துடித்தனர். பயணிகள் பலரும் செய்வது அறியாது திகைத்துப்போய், அந்த விமானத்தின் எல்லா புறமும் அங்கும் இங்குமாக ஓடத் தொடங்கினர்.

அத்துடன், விமானி அறையில் இருந்து முன் பக்க கதவு உள்ள பகுதி வரை அந்த விமானம் உடைந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. 

இதனை நேரில் பார்த்த விமான நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள், விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்தவர்களை மீட்கத் தீயணைப்பு வாகனங்களுடன் மீட்புக் குழுவினர் ஓடுபாதைக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. 

இந்த பயங்கர விபத்தில் 2 விமானிகளில் வசந்த் சாத்தே என்ற ஒரு விமானியும், 18 பயணிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில், 100 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியானது நள்ளிரவு கடந்தும் நீடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து. படுகாயம் அடைந்த அனைவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 15 பேரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த முகமது ஜிடான் பைசல் பாபு, ஷனிஜா பைசல்பாபு, ஷாலா ஷாஜகான் ஆகியோர் பயணித்துள்ளனர். 

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மீட்புப்பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மேலும், கேரள விமான விபத்தில் காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மற்றும் அருகில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தார். இது குறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “பாதிக்கப்பட்ட பயணிகள் விரைவில் குணம் அடையப் பிரார்த்திப்பதாகவும்” குறிப்பிட்டுள்ளார். 

கேரள விமான விபத்து தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் விசாரித்து, தெரிந்துகொண்டார். அத்துடன், மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

மேலும், “இந்த விபத்தில் இறந்தவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும், காயமடைந்தவர்களை விரைவாகக் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” என்றும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, கேரள விமான விபத்து தொடர்பாக உதவி எண் அறிவிக்கப்பட்டது. அதன்படி, விமானத்தில் பயணித்தவர்களின் விவரங்கள் குறித்து 0495 - 2376901 என்ற எண்ணில் அறிந்து கொள்ளலாம் என்றும், விமான பயணிகளின் நிலை குறித்து அறிய விமான நிலைய கட்டுப்பாட்டு அறை - 0495 2376901, மலப்புறம் ஆட்சியர் - 0483 2736320, கோழிக்கோடு ஆட்சியர் எண் - 0495 2376901 ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்து காரணமாக, மற்ற விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், நாடு திரும்ப முடியாமல் ஏராளமான இந்தியர்கள் வெளிநாடுகளில்  தவித்து வருகின்றனர்.

இதனிடையே, இது போன்ற விமான விபத்துகள் நிகழும்போது, விமானம் தீப்பிடித்து விடும். இதன் காரணமாக உயிர்ச்சேதம் அதிகமாக இருக்கும். ஆனால், மழை காரணமாக ஏற்பட்ட இந்த விமான விபத்தில், மழையின் காரணமாகவே விபத்தின் போது விமானம் தீ பிடிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

கேரளாவில் உட்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் ஒரு பக்கம் பரவிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் கனமழையால் ஸ்தம்பித்த கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலியாகி உள்ளதொடு, 50 பேருக்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும் கூறப்படும் இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில், தற்போது கேரளாவில் விமான விபத்தும் நிகழ்ந்திருப்பது, கேரள மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.