கடந்த சில வருடங்களாகவே, 90-களில் பிறந்தவர்கள் மட்டுமே பாரம்பரியம் முதல், தொழில்நுட்பத்தின் பிறப்பு, வளர்ச்சி என அனைத்தும் கண்ட தலைமுறைகள் என சமூகவலைதளங்களில் பெருமையாக பதிவிட்டு வருகின்றனர்.

இதன்படியே, 90-ஸ் கிட்ஸ் காலத்தில் கிடைத்த இனிப்பு பண்டங்கள், மிட்டாய்கள், விளையாட்டு சாமான்களை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து பிரபலமடைந்து வருகிறார் நெல்லையை சேர்ந்த இளைஞர் கிருபாகரன்.

நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் கிருபாகரன். கேட்ரிங் தொழிலுக்கான பாடப்பிரிவை படித்துள்ள இவர், நெல்லையில் உள்ள தனியார் உணவகத்தில் பணி செய்து வந்தார், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சொந்தமாக டீ கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமல் செய்யப்பட்ட பின்னர் டீ கடை தொழில் செய்யமுடியாத சூழல் ஏற்பட்டது.
அப்போது மாற்று தொழில் செய்வது குறித்து பலரிடமும் ஆலோசனை கேட்டு உள்ளார். இறுதியாக நண்பர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பார்த்த பதிவுகள் அடிப்படையில் 90s கிட்ஸ் எண்ணங்களையும் நீங்கா நினைவுகளையும் பிரதிபலிக்கும் விதமாக 90 களில் பிறந்த குழந்தைகள் உண்டு மகிழ்ந்த மிட்டாய்கள், இனிப்பு பண்டங்கள், விளையாட்டுப் பொருட்கள் கொண்ட கடையை திறக்கலாம் என முடிவு செய்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கடை திறந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்த கிருபாகரன், பழைய நினைவுகளை பிரதிபலிக்கும் விதமாக 90-களில் குழந்தையாக இருந்தவர்கள் ருசித்து மகிழ்ந்த மிட்டாய், இனிப்பு பண்டங்கள் கொண்ட கடையை திறக்க முடிவுசெய்தார்.

அதில் கமர்கட்டுகள், தேன்மிட்டாய், இலந்தபழம், ஜவ்வு மிட்டாய், அப்பம், கல்கோனா என 60 வகையான 90s கிட்ஸ் மிட்டாய் வகைகளும் பம்பரம், காத்தாடி, கோலிகுண்டு, ராஜா ராணி பொம்மை போன்ற விளையாட்டு பொருட்கள் அடங்கிய 30க்கும் மேற்பட்ட பொருட்கள் என 100-க்கும்  மேற்பட்ட பொருட்களை கடையில் விற்பனைக்கு வைத்து உள்ளார். புறவழிச்சாலையில் வைக்கப்பட்டுள்ள இந்த கடையை பார்த்து வாகனத்தில் செல்லும் பலரும் வந்து பொருட்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

90-களில் விரும்பி சாப்பிட்ட மிட்டாய்களும், விளையாடி மகிழ்ந்த விளையாட்டு பொருட்களும் கொரோனா காலத்தில் நினைவுகளில் தன்னை வாழ வைப்பதாக மனம் திறக்கிறார் இந்த 90-ஸ் கிட்ஸ் கடை உரிமையாளர்.

2k கிட்ஸ் என்று சொல்லக்கூடிய 2000 களில் பிறந்தவர்கள் கூறுகையில், இது போன்ற மிட்டாய்களை கேள்விபட்டிருக்கிறோம் ஆனால் முதல்முறையாக நெல்லையில் தற்போது இந்த பொருட்களை பார்ப்பதுடன் வாங்கி சுவைக்க முடிகிறது என்று தெரிவிக்கின்றனர்.


90களில் பிறந்தவர்கள் சிறு வயதில் இதனை வாங்கி உண்டு மகிழ்ந்தோம், அதன் பின்னர் இந்த பொருட்கள் எங்கும் கிடைப்பதில்லை, ஆனால் நெல்லை மாநகர பகுதியில் இந்த கடையை பார்த்தவுடன் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொருட்களை தேடி தேடி வாங்கிவதுடன் பழைய நினைவுகளை சமூக வலை தளங்களில் பகிர்வதுடன் தன் வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளுக்கு கொடுப்பதற்கும் வாங்கிச் செல்வதாக தெரிவிக்கின்றனர்.

90s கிட்ஸ் கடையில் பொருட்களை வாங்கி செல்பவர்கள் அதனை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டு நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.