தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களில் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதில், பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் என மொத்தம் 8.16 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.

இதில், பள்ளி மாணவர்கள் மட்டும் 7,79,931 பேர், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். அதன்படி, மாணவியர்கள் 4,24,285 பேரும், மாணவர்கள் 3,55,646 பேரும் தேர்வு எழுதினார்கள்.

மேலும், பொதுப் பாடப் பிரிவில் 7,28,516 பேர் தேர்வு எழுதினார்கள். தொழிற்படப் பிரிவில் 51,415 பேர் தேர்வு எழுதியதாகத் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மார்ச் 2020 ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு மார்ச் / ஜூன் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை 2020 பருவத்தில் எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப்படும்” என்று கூறப்பட்டு இருந்தது. 

அத்துடன், “மாணவர்களின் தேர்வு முடிவுகள் மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தியாக மதிப்பெண்கள் விவரம் அனுப்பி வைக்கப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதன்படி, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று இணையதளத்தில் வெளியிட்டது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களில் மாணவர்களை விட, மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

ஒட்டுமொத்தமாக 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர் 94.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவர்கள் 89.41 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், எப்போதும் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் 5.39 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

அத்துடன், 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாற்றத்திறனாளி மாணவர்களில் 2,506 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதே போல், அரசுப் பள்ளிகளில் 85.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மெட்ரிக் பள்ளிகளில் 98.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

குறிப்பாக, 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 97.12 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 2 ஆம் இடமும், கோவை மாவட்டம் 3 ஆம் இடமும் பிடித்துள்ளன. 

முக்கியமாக, 12 ஆம் வகுப்புத் தேர்வில் சிறைவாசிகள் 50 பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், தமிழக பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.

தமிழகத்தில் மொத்த 7.127 மேல்நிலைப் பள்ளிகள் இருக்கும் சூழலில், 2,120 பள்ளி மாணவர்கள் மட்டுமே 100 சதவீதம் முழு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல், “பொதுத்தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்” என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், மதிப்பெண் பட்டியலைப் பெற்றுக்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், விடைத்தாள் மதிப்பெண் மறு கூட்டலுக்குப் பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி, வழி முறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.