தேசியக் கொடியை அவமதித்தும், தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைத்தளங்களில் வீடியோ 

வெளியிட்டதாக பாஜக நிர்வாகி ஒருவர் நடிகர் எஸ்.வி. சேகர் மீது சென்னை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ள சம்பவம், வைரலாகி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அதிமுக கட்சியின் கொடியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் படத்தை நீக்க வேண்டும் என்று நடிகர் எஸ்.வி. சேகர் 
சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

இது தொடர்பாகப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் எஸ்.வி. சேகரை கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

அப்போது, முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, செய்தியாளர் ஒருவர் நடிகர் எஸ்.வி சேகர் கூறிய சர்ச்சைக்குரிய விசயம் பற்றி கருத்துக் கேட்டார்.

அதற்குப் பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “நடிகர் எஸ்.வி சேகர் எல்லாம் ஒரு அரசியல்வாதியே கிடையாது என்றும், அவர் வாயில் வருவதை எல்லாம் ஔறி கொட்டுவார் என்றும், வழக்கு என்று வந்துவிட்டால் ஓடி ஒளிந்து கொள்வார் என்றும்” பதில் அளித்தார். 

முதலமைச்சர் பழனிசாமி, நடிகர் எஸ்.வி சேகர் பற்றி பேசிய இந்த கருத்தும், இணையத்தில் பெரும் வைரலானது. இது, இணையத்தில் விவாத பொருளாக மாறிய நிலையில், பலரும் நடிகர் எஸ்.வி சேகர் பற்றிய கருத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் நடிகர் எஸ்.வி. சேகர், மீண்டும் முதலமைச்சரைச் சீண்டி பார்க்கும் விதமாக புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

அதாவது, சமீப காலமாகத் தமிழ்நாட்டின் சில இடங்களில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிலைகள் மீது காவிச்சாயம் பூசி அவமதித்த சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. 

இந்த சம்பத்தை தமிழக முதலமைச்சர் பழனிசாமி வன்மையாகக் கண்டித்தார். அத்துடன், “காவிச்சாயம் பூசி களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்தார். 

இது குறித்து, பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்.வி சேகர், சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், “காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழ்நாடு முதலமைச்சர், காவி நிறம் உள்ளதால் களங்கமான தேசியக் கொடியைத் தான், ஆகஸ்டு 15 ஆம் தேதி ஏற்றப்போகிறாரா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும், “தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை, பச்சை மட்டும் வைத்து விட்டு, அதாவது இந்துவை தவிர்த்துவிட்டு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மட்டும் இருந்தால் போதுமானது என்ற முடிவுக்கு முதலமைச்சர் வரத் தயாரா?” என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பைக் கிளப்பினார். இதனால், இந்த வீடியோ வைரலானது. 

இதன் காரணமாக, நடிகர் எஸ்.வி சேகருக்கு, எதிர்ப்புக் குரலும், கண்டன குரலும் எழுந்தன. ஆனால், இதைப் பற்றியெல்லாம் அவர் துளிகூட கவலைப்படவில்லை. இதற்கெல்லாம் கலங்காத அவர், இது தொடர்பாக எதிர் கருத்துக்களைக் கவனித்துக்கொண்டே இருந்தார்.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர், நடிகர் எஸ்.வி சேகர் பேசியது தொடர்பாகச் சென்னை சைபர் கிரைம் பிரிவில் எஸ்.வி சேகர் மீது புகார் அளித்து உள்ளார். 

அந்த புகாரில், “நடிகர் எஸ்.வி.சேகர் மீது தேசியக் கொடியை அவமதித்தது, தமிழ்நாடு முதலமைச்சரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், கலகத்தை தூண்டும் வகையில் பேசியதற்கும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தி இருந்தார். இதனால், நடிகர் எஸ்.வி.சேகர் மீது தேசியக் கொடியை அவமதித்தது தொடர்பாகக் கொடுக்கப்பட்ட புகார் தொடர்பான செய்தி, இணையத்தில் வைரலாகி வருகிறது.