பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் கடந்த மாதமே பல்வேறு மாநிலங்களில் வகுப்புகள் தொடங்கின. ஆனால் தமிழக அரசு இது குறித்து முடிவெடுக்காமல் தவிர்த்து வந்தது.

கொரோனா பரவல் குறைந்த பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக அரசு அக்டோபர் 31ஆம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்தது.

பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவித்தது. இதைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படும் போது பின்பற்றப்படவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளோடு நேற்று முன்தினம் (அக்டோபர் 2) ஆலோசனை நடத்தினார்.

அதில், ``தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு 6000 வரை பதிவாகி வந்த நிலையில் தற்போது 2500 என்ற அளவில் தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது. பள்ளிகளை இப்போது மீண்டும் திறந்தால் இவை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு அதிகம்" என்று நிபுணர்கள் பரிந்துரைத்ததாக தெரிகிறது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், தமிழக பள்ளிகள் திறப்பு முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

பள்ளிகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - பா ம க இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் என பலரும் கூறினர். அன்புமணி ராமதாஸ், தனது அறிக்கையில், ``கொரோனா வைரஸ் பாதிப்பு மாணவர்களையும், ஆசிரியர்களையும் மட்டும் பாதிக்கக்கூடியது அல்ல. அவர்கள் மூலமாக வீட்டில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள், முதியோர் குழந்தைகளையும் தாக்கி மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இவ்விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கைத் தேவை. அனைத்து பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பத் தயங்கும் நிலையில், தனியார் பள்ளிகள் அழுத்தம் கொடுத்து அதனால் இம்முடிவை அரசு எடுத்ததாக இருக்கக் கூடாது" என்று கூறியிருந்தார்.

மு.க.ஸ்டாலின், ஜனவரி இறுதியில் ஆய்வு செய்துவிட்டு, அதன்பின் பள்ளிகளை திறக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இந்த அறிக்கை குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார். அமைச்சரின் இந்த வாக்குறுதி, பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என்ற நம்பிக்கையை விதைத்தது.

இந்நிலையில் இன்றைய தினம் (நவம்பர் 4) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையின் முடிவில், பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 9-ம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆலோசனை முடிவடைந்த பின்னர், தமிழக அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

``பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகளை பெற்றிட வரும் 9-ம் தேதி தமிழகம் முழுவதும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற  உள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் காலை 10 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கருத்து கேட்பு கூட்டங்களில் 9 முதல் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். கலந்துகொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.