ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக வெளியான காஞ்சனா திரைப்படத்தின் மூன்றாவது பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிப்பில் காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற டைட்டிலில் ரீமேக் செய்தார் ராகவா லாரன்ஸ்.

இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இவர் அடுத்ததாக பொல்லாதவன் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் ருத்ரன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ப்ரியா பவானி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.இவற்றை தவிர பி வாசு இயக்கத்தில் உருவாகவிருக்கும் சந்திரமுகி 2 படத்திலும் லாரன்ஸ் நடிக்கவுள்ளார்.

தற்போது இவரது ராகவா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.துர்கா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.