மகாநதி படத்தின் வெற்றிக்கு பிறகு உலகளவில் பிரபலமான நடிகையாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். சிறந்த நடிப்பிற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பின் பல பாலிவுட் பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் பெண்குயின் திரைப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை நரேந்திர நாத் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார். ஹீரோயினை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் ஹோம்லியாகவும், மார்டனாகவும் தோன்றியுள்ளார் கீர்த்தி. இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் மிஸ் இந்தியா படத்தின் பின்னணி இசை பணிகள் முழுவதும் முடிவடைந்துவிட்டதாக கூறியுள்ளார். 

இந்த பதிவு இணையத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகிறது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். மிஸ் இந்தியா டீஸர் மற்றும் பாடல் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக தான் தனது உடல் எடையை கீர்த்தி குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் மிஸ் இந்தியா படத்தின் இயக்குனர் நரேந்திர நாத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு செய்துள்ளார் கீர்த்தி. இதனால் படம் தொடர்பான அப்டேட் ஏதாவது இருக்குமா என்ற ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள். 

இதுதவிர்த்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சூரி, பிரகாஷ் ராஜ், மீனா, சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. 

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் குட் லக் சகி டீஸர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இயக்குனர் நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆதி மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தில் துப்பாக்கிச் சூடு வீராங்கனையாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.