“அரியர் மாணவர்களின் அரசனே.. ஐயா எடப்பாடியாரே.. அரியர் பாஸ் பண்ண வைத்ததற்கு நன்றி அய்யா!” என்று, இளைஞர்கள் கட்டவுட் வைத்து முதலமைச்சரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரவேற்ற சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா என்னும் பெருந் தொற்றால், தமிழகத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகள் தேர்வுகள் அனைத்தும் அதிரடியாக ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஆனால், கல்லூரிகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களின் நிலை என்ன? என்று கேள்விகள் எழுந்தது.

இதனையடுத்து, உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “கல்லூரி இறுதி பருவத் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த நிலையில், அரியர் வைத்திருந்த மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ்” என்றும், அறிவித்தார். 

இதனால், கல்லூரியில் காலம் காலமாக அரியர் வைத்திருந்த மாணவர்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனால், அரியர் வைத்திருந்த மாணவர்கள் அனைவரும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் இருந்தது. 

இதனையடுத்து, “அரியர் வைத்திருந்த மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ்” என்று அறிவித்த முதலமைச்சரைப் பாராட்டி, இணையத்தில் மீம்ஸ்கள் தெறிக்கவிடப்பட்டன. அந்த மீம்ஸ்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு நாகையில் சிலர் இளைஞர்கள் இணைந்து, “அரியர் மாணவர்களின் அரசனே.. ஐயா எடப்பாடியாரே.. அரியர் பாஸ் பண்ண வைத்ததற்கு நன்றி அய்யா!” என்று, கட்டவுட் வைத்தனர். இந்த கட்டவுட், இணையத்தில் வைரலாகி வந்தன.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்கு மத்தியில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கை பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டம் தோறும் சென்று, ஆய்வு செய்து அதிகாரிகளிடம் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். 

அதன்படி, கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், நேற்று இரவு நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்து விட்டு திருவாரூர் செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வாகனத்தில் வெளியே வந்தார். 

அப்போது, அதிமுக தொண்டர்கள் பலர் அங்கு குவிந்திருந்தனர். அப்போது. தனது கட்சி தொண்டர்களை வாகனத்தில் அமர்ந்தபடி பார்த்து, அவர்களுக்கு முதலமைச்சர் கை அசைத்து வணக்கம் வைத்துக்கொண்டே வந்தார். 

அந்த நேரம் பார்த்து, முதலமைச்சரை நோக்கி, கூட்டத்திலிருந்த இளைஞர் ஒருவர் ஓடி வந்து, “அரியர் பாஸ் பண்ண வைத்ததற்கு நன்றி அய்யா” என்று உரத்த குரலில் கத்தினார். இந்த வார்த்தையைக் கேட்ட முதலமைச்சர், சிரித்தபடியே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சர் சிரித்தபடியே கடந்து செல்லும் அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. இதனால், இது தொடர்பான மீம்ஸ்சும் இளைஞர்கள் இணையத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.