நாடுமுழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல நோயாளிகள் நோயால் பாதிக்கப்பட்டு போதிய படுக்கை வசதியும் ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்காமல் திக்குமுக்காடி வருகிறார்கள். மத்திய அரசும் மாநில அரசுகளும் இந்த நிலைமையை சரிசெய்ய இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறது.தமிழகத்தில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்த நிலையில் கிட்டத்தட்ட 300 பேர் தினசரி கொரோனாவால் உயிரிழந்து வருகிறார்கள்.

திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் சிகிச்சை பலனின்றி  உயிரிழக்கிறார்கள். தமிழகத்திற்கு முழு கட்டுப்பாட்டுடன் கூடிய முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி கொடுத்து உதவுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனடிப்படையில் பலரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி கொடுத்து உதவி வருகிறார்கள். திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி கொடுத்து வருகிறார்கள். இந்த வகையில் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் தனது பங்களிப்பாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 30 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.

முன்னதாக நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தியின் குடும்பத்தினர் நடிகர் அஜித்குமார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பலரும்  முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி செய்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.  நடிகர் சியான் விக்ரம் செய்த இந்த பேருதவிக்கு சமூக வலைதளங்களில் பலரும் அவரை  பாராட்டி வருகிறார்கள்.