கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிஹாரிகா கொனிடெலா. ஆறுமுகக்குமார் இயக்கிய இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடிப்பில் அசத்தியிருப்பார் நிஹாரிகா. தெலுங்கு சூப்பர்ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளும் ஆவார் நிஹாரிகா. தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் நிஹாரிகா புதுப்படங்களை தேர்வு செய்ய கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் நடிகை நிஹாரிகாவுக்கும், குண்டூர் ஐ.ஜி. மகன் சைதன்யா ஜொன்னலகட்டாவுக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து நிஹாரிகா தான் சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனக்கு திருமணம் நடக்கப் போவதை அறிவித்தார். இதனைத்தொடர்ந்து நிஹாரிகாவுக்கும், சைதன்யாவுக்கும் ஹைதராபாத்தில் நேற்று இரவு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் சிரஞ்சீவி தன் மனைவி, மகன் ராம் சரண் தேஜாவுடன் கலந்து கொண்டார். நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நிஹாரிகாவின் அண்ணனும், நடிகருமான வருண் தேஜ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நிச்சயதார்த்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நிஹாரிகா, சைதன்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

நிஹாரிகாவின் திருமணம் அடுத்த ஆண்டு 2021 பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கிறது என செய்திகள் வெளியாகி வருகிறது. சைதன்யா எம்.பி.ஏ. படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறாராம். முன்னதாக நிஹாரிகாவுக்கும், நடிகர் பிரபாஸுக்கும் தான் திருமணம் நிச்சயிக்கப்படுவதாக பேச்சு கிளம்பியது. இது குறித்து அறிந்த நிஹாரிகா அது எல்லாம் ஒன்றும் இல்லை என்றார்.

திருமணத்திற்கு முன்பு முடிந்த அளவுக்கு நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார் நிஹாரிகா. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் முடியாமல் போனது. திருமணத்திற்கு பிறகு நிஹாரிகா நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த லாக்டவுனில் சுபநிகழ்ச்சிகள் அனைத்தும் எளிமையாக நடந்து வருகிறது. கடந்த 8ம் தேதி ராணாவுக்கும், அவரின் காதலியான மிஹீகா பஜாஜுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் நிஹாரிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை நேரத்தில் தொடர்ந்து நல்ல செய்திகள் வருவது ஆறுதலாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர் திரை விரும்பிகள். நிஹாரிகா மற்றும் சைதன்யாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.