சூப்பர் டீலக்ஸ் - பல கதைகளை சுற்றி வரும் சுரங்கப்பாதை. ஆத்திரம் நிறைந்த இளைஞன் மற்றும் அவனது குறும்புத்தனமான நண்பர்கள், நிச்சயக்கப்பட்ட திருமண தம்பதிகளின் வாழ்க்கை மற்றும் அவர்களது உணர்வுகள், குடும்பங்கள் மற்றும் இச்சமூகம் திருநங்கைகளை பார்க்கும் கோணம். இதை அழகாக சமர்பித்திருக்கிறார் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா.

வேம்பு, முகில், அற்புதம், லீலா, ஷில்பா, ராசுக்குட்டி, காஜி, முட்ட பப்ஸ், தூயவன், சூரி இந்த பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் என்பதை விட வாழ்ந்திருக்கிறார்கள். படத்தில் முதலில் ஈர்க்கும் ஒரு விஷயம் வண்ணங்கள். அருமையான DI பணிகள். தரமான தொழில்நுட்பம் மற்றும் கதையம்சத்துடன் இறங்கி அடித்திருக்கின்றனர் படக்குழு. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம். ஓவரான இசையை திணிக்காமல், சரியான இடத்தில் BGM அமைந்தது செவிகளுக்கு தேனூட்டியது. வளர்ந்து வரும் இசையமைப்பாளர்கள் யுவனிடம் இதை கற்றுக்கொள்ள வேண்டும்.

படத்தின் முதல் பாதி வேகமாக நகர்கிறது. இரண்டாம் பாதி சற்று மெதுவாகவே நகர்கிறது. அதற்கு தேவையான காரணம் இருந்தாலும், காட்சிகளை சுருக்கியிருந்தால் இன்னும் கூடுதல் சுவாரஸ்யம் இருந்திருக்கும். திடீரென வரும் ஏலியன் காட்சிகளை நம் ஊர் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். மனைவி, குழந்தையை விட்டுச்சென்று வெகு நாட்கள் கழித்து வீடு திரும்பும் ஒருவர், திருநங்கை ஷில்பாவாக வந்து நிர்கிறார். சமூகத்தில் ஷில்பா படும் வேதனைகள், தன் மகன் ராசுக்குட்டி மீது வைத்திருக்கும் அன்பை பற்றி எடுத்துரைப்பதே அதன் சிறப்பம்சம். மக்கள் செல்வி ஷில்பாவின் நளினம், நடை, வெட்கம், சிரிப்பு என திருநங்கை பாத்திரத்தை அழகாக வெளிக்காட்டியுள்ளார் விஜய்சேதுபதி. ஷில்பாவின் விக் அதனுள் ஒளிந்திருக்கும் வழுக்கை முதற்கொண்டு மேக்கப்பில் கவனம் செலுத்தியிருப்பது பாராட்டக்கூடியது.

பட்டைத்தீட்டிய வாள் போல் கூர்மையான வசனங்கள். மிஸ்கின் வரும் காட்சியில் அது வெறும் கல் தான் சாமி, இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இறைவன் பெயரை வைத்து பிரச்சாரம் செய்பவர்களை அழகாக வர்ணித்துள்ளனர். திறந்த புத்தகம் போல் உள்ளது ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு. காவல் துறை அதிகாரி பெர்லினாக வரும் பகவதி பெருமாளின் நடிப்பு அருமை. படத்தில் அட்மாஸ்பியர் சவுண்ட்டில் வரும் பழைய பாடல்கள் போன்றவை ஹாலிவுட் டச்சில் உள்ளது.

எத்தனை பேர் இதை கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. ஷில்பா தனது மகனை பிரிந்து தேடும் நேரத்தில், குறுக்கு சந்தில் ஓட்டப்பட்டிருக்கும் சிங்கப்பெருமாள் போஸ்ட்டர் கிழிக்கப்பட்ட நிலையில் ஒட்டியிருக்கும், இது ஆரண்ய காண்டம் படத்தை நினைவு படுத்துகிறது. இயக்குனர் பாலாஜி தரணீதரனும் ஒரு காட்சியில் நடித்திருப்பார். 

தமிழ் சினிமாக்கள் தரம் உயரவேண்டுமென்றால், இது போல் வெளியாகும் படைப்பை ரசிகர்கள் வரவேற்க வேண்டும். நல்ல படைப்பை பத்து வருடம் கழித்து கொண்டாடுவதை விட, நிகழ்காலத்திலே ருசித்து விடுங்கள். ஆகா னு சொன்னா............