அதிலாபாத் வனப்பகுதியில் ஆங்கிலேயர்களின் அலப்பறையான என்ட்ரியுடன்  துவங்குகிறது கதை. கண்ணில் தீப்பந்தம், அதிர வைக்கும் ஆக்ஷனுக்கு இவர் சொந்தம் என உதிக்கிறார் காவல் அதிகாரி அல்லுரி சீதாராம ராஜு( ராம் சரண்).

ஊர் மக்கள் போற்றும் உன்னத காப்பானாக, வேட்டை தெரிந்த சேட்டைக்காரனாக அவதரிக்கிறார் கொமரம் பீம் (ஜூனியர் என்.டி.ஆர்). வனப்பகுதியில் புலியுடன் வேட்டையாடிய காட்சி, கண்களுக்கு விருந்து என்றே கூறலாம்.

ஆங்கிலேயரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வேட்டைக்காரனை தேடும் தேடல் பயணத்தை தொடர்கிறார் ராஜு. அங்கிலேயேரின் பிடியில் சிக்கியுள்ள ஊர் மழலையை காப்பாற்ற துடிக்கிறார் கொமரம் பீம்.


இருவரின் தேடல்கள் வெவ்வேறாக இருந்தாலும், நட்பால் இணைகிறார்கள்.

RRR தமிழ் திரை விமர்சனம்

கற்களாக இருந்தாலும்  காதல் மலரத் தானே செய்யும். வெள்ளைக்கார மாளிகையில் வெள்ளந்தியாக பூத்திருக்கும் மலருடன் காதல் வசப்படுகிறார் கொமரம் பீம்.

நட்பு சகோதரத்துவமாக மாறும் தருணத்தில்  தான் வந்த உண்மையான நோக்கத்தை பகிர்கிறார் பீம். ஒரு கட்டத்தில் ராஜுவின் உண்மை முகம் வெளிவர, நீரும் நெருப்பும் மோதி கொள்கிறது. 

சிலிர்க்க வைக்கும் ஆக்ஷன் அம்சங்கள். 
பட்டையை கிளப்பும் பாடல்கள், பரவசமூட்டும் காட்சிகள், விறுவிறுப்பான ஸ்க்ரீன் பிலே என முதல் பாதி நகர்கிறது.

வேடனின் வேஷத்தை உணர்ந்து, அன்புடன் கலந்த கோபத்தை வெளிப்படுத்தும் பீம்(ஜூனியர் என்.டி.ஆர்) -ன் நடிப்பும் பலே.

செட் அமைப்புகள், படத்தில் உபயோகிக்கப்பட்ட வாகனங்கள், வெளிநாட்டு துணை நடிகர்கள் போன்ற விஷயங்கள் நமக்கு லகான்,  மதராசப்பட்டினம்,  ஹேராம் போன்ற சீரான படைப்புகளை நினைவுகூரும்.

நாடி நரம்புகளை முருக்கேற்றும் நாட்டு கூத்து பாடல்,  செவிகளுக்கு தேனூட்டும் பழங்குடி பெருமை பாடல், காட்சிகளின் வேகத்திற்கு ஏற்றார் போல் பின்னி பெடலெடுக்கும் பின்னணி இசை என சக்கை போடு போட்டுள்ளார் இசையமைப்பாளர் மரகதமணி. இசையமைத்த இவர் விரல்கள் ஒவ்வொன்றும் மரகதமே.

யுத்தத்த தேடிக்கிட்டு ஆயதம் தானே வரும், கொண்டாலும் உன் காலில் மண்டியிடவானோ...என வார்த்தைகளை வர்ணித்துள்ள மதன் கார்க்கியின் எழுதுகோலுக்கு ஆயிரம் முத்தங்கள்.

நாக்கில் கேசரி என விளம்பரங்களின் விளக்காய் திகழ்ந்த அஜய் தேவ்கன், இரண்டாம் பாதியில் ராஜு மற்றும் சுதந்திர தாகம் உள்ள மக்களின் இலக்கணமாய் திகழ்ந்துள்ளார்.  அலட்டிக்கொள்ளாத ஆலியா பாட், நடிப்பில் சுழட்டி போட்டுள்ளார்.

இராமாயணத்தை நினைவு கூரும் வகையில் இரண்டாம் பாதியில் சில காட்சிகள் இருந்தாலும், தனக்கே உரித்தான ஸ்டைலில் படமாக்கியுள்ளார் இயக்குனர்.

வெள்ளைக்காரர்கள் எனும் வனத்தில் புலியும்(பீம்), வேடனும்(ராஜு) என்ன செய்கிறார்கள் ? அவர்களது பாதை என்னவாகிறது என்பதே இரண்டாம் பாதி.

நம்பகத்தன்மைக்கு அப்பாற்பட்ட ஆக்ஷன் காட்சிகளை நம்பும் வகையில் நம் மனதில் பதியவைத்த ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சல்யூட். குறிப்பாக முதல் பாதியில் பாலத்தின் அருகே வரும் ஸ்டண்ட் சபாஷ்.

இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள், டோலிவுட் மசாலா கொண்டி கார சாரமாக இருந்தாலும்... மாஸ் எலிமெண்ட்டாகவே இடம்பெறுகிறது.

மூன்று நொடிகள் கூட பொறுமை இல்லா இந்த டிஜிட்டல் உலகில், மூன்று மணிநேரம் ரசிகர்களை இன்பதிர்ச்சியில் கட்டிப்போட்ட ராஜமௌலி காருவுக்கு கோடான கோடி நன்றிகள். சுதந்திரம் தாகம் கொண்ட இரண்டு மாவீரர்களை கதையில் புகுத்து, நம் மனதில் பதித்து விருந்தளித்துள்ளார்.

பேன் இந்திய இயக்குனர் என்று கூறுவதை விட பேன் வேர்ல்டு இயக்குனர் என்று தான் போற்ற வேண்டும்.

சுதந்திர தாகத்துடன் களத்தில் போராடியவர்களின்  இரத்தங்கள், ரணங்கள், ரௌத்திர செயல்களே இந்த இரத்தம் ரணம் ரௌத்திரம்.