சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் பல போராட்டங்களை கடந்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.கோலமாவு கோகிலா பட இயக்குனரும் சிவகார்த்திகேயனின் நண்பருமான நெல்சன் திலீப்குமார் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை பார்க்கலாம்.

ஆர்மியில் டாக்டராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு திருமணம் நடத்திவைக்க பெண் பார்க்கின்றனர் அப்படி ப்ரியங்கா மோகனை மீட் செய்யும் சிவகார்த்திகேயன் காதல் வயப்படுகிறார் ஆனால் ப்ரியங்காவிற்கு சிவகார்த்திகேயனை பிடிக்காமல் போக,அவரை சமாதானப்படுத்த சென்னைக்கு விரைகிறார் சிவகார்த்திகேயன்.இந்த நேரத்தில் ப்ரியங்கா வீட்டில் குழந்தையை கடத்தி செல்கிறது வில்லன் குழு.வில்லன்களிடம் போராடி சிவகார்த்திகேயன் குழந்தையை மீட்டாரா இல்லையா என்பது படத்தின் மீதிக்கதை

எப்போதும் கவுண்டர்,துறுதுறு கேரக்டர் என்று கவனம் ஈர்க்கும் சிவகார்த்திகேயன் தனது பாணியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இந்த படத்தில் மிடுக்கான ராணுவ டாக்டராக அசத்தியிருக்கிறார்.அதிகம் பேசாமல் அசத்தலான நடிப்பினை வெளிக்காட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.பாடலில் வருவது போலவே மெழுகு டாலாக கவனம் ஈர்க்கிறார் ப்ரியங்கா மோகன்.கதைக்கு தேவையான தனது பங்கினை மிகச்சிறப்பாக செய்துள்ளார்.விரைவில் தென்னிந்திய சினிமாவின் கனவுகன்னியாகும் வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.

வில்லனாக வரும் வினய் கச்சிதமாக பொருந்தி போகிறார் தனது உடல்பாவனைகளால் மிரட்டலான வில்லனாக அசத்தியிருக்கிறார் வினய்,இருந்தாலும் அவரது கேரக்டருக்கு கொஞ்சம் Detailing கொடுத்திருக்கலாம்.அர்ச்சனா,அருண் அலெக்சாண்டர்,இளவரசு,தீபா என இவர்கள் அனைவரும் காமெடி காட்சியானாலும் எமோஷனல் காட்சியானாலும் சரி தங்கள் வேலையை சூப்பராக செய்துள்ளனர்.படத்தின் காமெடி காட்சிகள் வெகுவாக ஒர்க் ஆகியுள்ளன அதற்கு முக்கிய காரணம் யோகி பாபு மற்றும் ரெட்டின் கிங்ஸ்லி இருவரும் அடிக்கும் கவுண்டர்கள் திரையரங்குகளில் கைதட்டல்களை அள்ளுகின்றன.

கோலமாவு கோகிலா படத்தில் பிளாக் காமெடி பாணியில் கலக்கிய நெல்சன் , இந்த படத்திலும் தனது பலம் எது என்று நன்கு அறிந்து ரசிகர்களுக்கு ஒரு நல்ல படத்தினை கொடுத்துள்ளார்.முதல் 30 நிமிடங்களிலேயே பாடல்களை முடித்துவிட்டு அடுத்த 2 மணிநேரம் பாடல்கள் இன்றி படத்தினை விறுவிறுப்பாக நகர்த்தி சென்றுள்ளார் நெல்சன்.அங்கங்கே கமர்சியல் சினிமாவிற்குரிய சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அவற்றை தனது காமெடி மூலம் திசைதிருப்புகிறார் நெல்சன்.

நெல்சனுக்கு பக்கபலமாக படத்தின் மற்றொரு நாயகனான இருப்பது இசையமைப்பாளர் அனிருத்.ஏற்கனவே  இவரது இசையில் பாடல்கள் பட்டையை கிளப்ப , பின்னணி இசை மூலம் படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளார் அனிருத்.ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக்கண்ணன் தனது கேமரா மூலம் படத்திற்கு வலு சேர்கிறார்.என்னதான் படம் ரசிகர்களை ஜாலியாக கைதட்ட வைத்தாலும் சில இடங்களில் காட்சியின் நீளத்தை குறைத்திருக்கலாம் என்பது தோன்றுகிறது.காட்சிகளின் நீளத்தை கட் செய்து இன்னும் க்ரிஸ்ப்பாக படத்தினை கொண்டுசென்றிருக்கலாம்.சடசடவென முடியும் கிளைமாக்ஸ் அதில் வரும் சில கிராபிக்ஸ் உள்ளிட்டவை சிறு மைனஸுகளாக இருக்கின்றன.

அங்கங்கே சில குறைகள் இருந்தாலும் , படத்தின் காமெடி காட்சிகள் கைகொடுக்க டாக்டரின் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளது.