சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து ஐ.பி.எல். தொடரிலிருந்து ஹர்பஜன் சிங் விலகி உள்ளதால், சென்னை சூப்பர் கிங்ஸில் என்ன தான் நடக்கிறது? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், 13 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா, இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வரும் 19 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால், 8 அணிகளைச் சேர்ந்த இந்திய வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளனர். போட்டியில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு வீரர்களும் அங்கு இணைந்த வண்ணம் உள்ளனர். 

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது வரை 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில், இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முனைப்புக் காட்டி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த வாரம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், சென்னை அணியைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனும், இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக 2 வது இடத்தில் இருக்கும் சுரேஷ் ரெய்னா, திடீரென்ற போட்டியிலிருந்து விலகி இந்தியா திரும்பினார்.

இதனையடுத்து, “சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணத்தினால் போட்டியில் இருந்து விலகினார் என்றும், இந்த சீசனில் அவர் விளையாடமாட்டார்” என்றும், சென்னை அணியின் நிர்வாகம் சார்பில் விளக்கம் தரப்பட்டது.

அதே நேரத்தில், “அணி வீரர்கள் தங்கி இரந்த ஓட்டலில் கேப்டன் தோனிக்கு ஒதுக்கப்பட்டது போல் பால்கனி வசதியுடன் கூடிய ரூம் தரவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் அணி நிர்வாகத்திடம் கேள்வி கேட்டபோது கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், கொரோனா பாதிப்பும் ஒரு முக்கிய காரணம் என்றும், இதனாலேயே சுரேஷ் ரெய்னா போட்டியில் இருந்து விலகினார்” என்றும், செய்திகள் வெளியானது.

இந்த திடீர் விலகலால், சென்னை அணியுடனான சுரேஷ் ரெய்னாவின் நீண்ட கால பந்தம் முடிவுக்கு வரலாம் என்று தகவல்கள் வெளியானது. 

அத்துடன், இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சீனிவாசன் அளித்த பேட்டியில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எப்பொழுதும் ஒரு குடும்பம் போன்றது என்றும், எல்லா சீனியர் வீரர்களும் இணைந்து வாழப் பழகி விட்டார்கள்” என்றும், குறிப்பிட்டார்.

அத்துடன், “யாருக்கும் தயக்கமோ, அதிருப்தியோ இருந்தால் நீங்கள் விலகிச் செல்லலாம். யாரையும், எதையும் செய்யச்சொல்லி நாங்கள் கட்டாயப்படுத்த மாட்டோம் என்றும், சில நேரங்களில் வீரர்களுக்கு வெற்றி தலைக்கேறி விடும்” என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

மேலும், “ஐ.பி.எல். போட்டி இன்னும் தொடங்கவில்லை என்றும், தான் என்ன தவற விடுகிறோம் என்பதை ரெய்னா நிச்சயம் உணர்வார் என்றும், அவருக்குக் கொடுக்கப்படும் இந்த சீசனுக்கான சம்பளம் 11 கோடி ரூபாயை அவர் இழக்கப் போகிறாரா?” என்றும், அவர் பேசினார். 

இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏதோ குழப்பம் நடப்பது மட்டும் தெரிந்தது. ஆனால், அது என்ன மாதிரியான குழப்பம் என்று, உறுதியாக எதுவும் தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், ஐ.பி.எல். தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் விலகி உள்ளார். அத்துடன், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாகவும், அவர் விளக்கம் அளித்து உள்ளார். 

ஏற்கனவே சுரேஷ் ரெய்னா விலகி உள்ள நிலையில், தற்போது ஹர்பஜன் சிங்கும் விலகி உள்ளதால், சென்னை அணி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கும், அணியின் நிர்வாகிகளுக்கும் இடையே ஏதோ ஒரு பெரும் பிரச்சனை இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.