மரபு வழியாக வரும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையை விட உடலுழைப்பு குறைந்து , அதனால் உண்டாகும் உடல் பருமனும் அதன் தொடர்ச்சியாக வரும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கைதான் சில ஆண்டுகளாய் அதிகமாக உள்ளது. சர்க்கரை நோய்க்கு மரபு வழி, உடல் பருமனை தவிர வேற சில காரணங்கள் இருந்தாலும் கூட முதன்மையான காரணமாக இவை இரண்டுமே மருத்துவர்களால் சொல்லப்படுகிறது.
 
கர்ப்பகாலத்தில் வரும் சர்க்கரை நோயின் எண்ணிக்கையும் சமீபகாலமாய் அதிகரித்து வருகிறது என்கிறது மருத்துவ உலகம். தாய்க்கு சர்க்கரைநோய் ஏற்படும் பட்சத்தில் அதன் விளைவு பல வாழ்வியல் நோய்களுக்கு ஆரம்பப் புள்ளியாக அமையும். அதனால் கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 
தாய்க்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, குழந்தைக்கு அதே பாதிப்பு ஏற்படும். கருவிலேயே இன்சுலின் சுரப்பு தூண்டப்படுவதால் அக்குழந்தைக்கு சர்க்கரை நோய் ஏற்படுவது எளிதாகிறது. இப்படி தான் ஒருவருக்கு எதிர்கால சர்க்கரை நோய்கான மரபு வழி விதை விழுகிறது. 


உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், பிசிஓடி பிரச்சனை உள்ளவர்கள் , தாமதமாக கர்ப்பம் தரிப்பவர்கள் எல்லாம் கர்ப்பகாலத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.  கர்ப்பம் தரித்த முதல் மாதம் விசிட்டில் ரத்தச் சர்க்கரை பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும். 16வது வாரத்தில் ஓஜிடிடி பரிசோதனையும் அவசியம். கர்ப்பகால சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இன்சுலின்தான் சிகிச்சை. சிகிச்சை மட்டுமே முழு தீர்வு கிடையாது , சரியான உணவுமுறை, குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சி மற்றும் எளிய உடற்பயிற்சி செய்தால் கர்ப்பகாலத்தில் ரத்த சர்க்கரை நோய் கட்டுப்படுத்த முடியும். 


கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரைநோயால் பல ஆபத்துகள் இருக்கிகின்றன. அதில் முக்கியமாக கருச்சிதைவு, அதிக எடையுடன் குழந்தை பிறப்பது, குழந்தை இறந்து பிறப்பது போன்ற ஆபத்துகள் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம்