சிறுத்தையுடன் கட்டிப்புரண்டு சண்டையிட்ட கிராமத்து இளைஞர்கள், அந்த சிறுத்தையை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள யாச்சனஹள்ளி கிராமானது, வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது. இதனால், இந்த பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது தொடர் கதையான ஒரு நிகழ்வாக இருந்து வருகிறது.

அப்படி, வன விலங்குகள் ஊருக்குள் வரும் போதெல்லாம் அந்த கிராமத்து மக்கள் அவற்றை மீண்டும் காட்டிற்குள் விரட்டி அடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

இப்படியான சூழ்நிலையில், கடந்த ஒரு மாதமாக சிறுத்தை ஒன்று அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து யாச்சனஹள்ளி கிராமத்திற்குள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்து வந்தது.

குறிப்பாக, அந்த சிறுத்தை ஊருக்குள் புகுந்து தெரு நாய்களை வேட்டையாடி கொன்று தின்று வந்திருக்கிறது. இதனால், அந்த சிறுத்தையை பிடிக்க அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் களத்தில் இறங்கினார்கள்.

இந்த நிலையில் தான், நேற்றைய தினம் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை, பசிக்காக அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்றது. அப்போது, அந்த நாய் ஓட்டம் பிடிக்கவே, அதனைத் துரத்திக்கொண்டு சிறுத்தையும் ஓடி உள்ளது.

இப்போது, இதற்காகவே காத்திருந்த அந்த கிராமத்து இளைஞர்கள் சிலர், துரத்திச் சென்று சிறுத்தையை பிடித்து அதனுடன் மல்லுக்கு நின்று சண்டை போட்டனர். அப்போது அந்த சிறுத்தை சில இளைஞர்களைத் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. ஆனாலும், அந்த கிராமத்து இளைஞர்கள் சிறுத்தையுடன் கட்டிப்புரண்டு, சண்டை போட்டு அது தப்பிச் செல்ல விடாமல் இறுகிப்பிடித்தனர். இதில், அந்த சிறுத்தையை பிடிப்பட்டது. இதனையடுத்து, அந்த சிறுத்தையின் கால்களை கயிற்றால் கட்டினர்.

அத்துடன், இது குறித்து வனத்துறைக்கு அந்த கிராமத்தினரே தகவல் தெரிவித்தனர். அதன் படி, கிக்கேரி போலீசாரும், வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, அந்த கிராமத்து இளைஞர்கள் பிடிபட்ட சிறுத்தையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, சிறுத்தையை மீட்ட அதிகாரிகள், அங்குள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று சிறுத்தையை விட்டு விட்டு வந்தனர்.

அதே நேரத்தில், ஊருக்குள் புகுந்து நாய்களை வேட்டையாடி அட்டகாசம் செய்து வந்த சிறுத்தையை பிடித்த இளைஞர்களை, கிராம மக்களும், வனத்துறை அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினார்கள். 

இதனிடையே, சிறுத்தையுடன் கட்டிப்புரண்டு கிராமத்து இளைஞர்கள் சண்டையிட்ட புகைப்படத்தை, அந்த கிராமத்து இளைஞர்கள் சிலர் இணையத்தில் பதிவிட்டனர். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நேற்றைய தினம் குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகாவில் தோட்டத்திற்குள் புகுந்து 8 வயது சிறுவனை புலி அடித்து கொன்றது. அப்போது, அந்த சிறுவனை காப்பாற்ற முயன்ற அவனது தாத்தா படுகாயம் அடைந்தார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா மடப்பூர் கிராமத்தில் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த ஒரு சிறுத்தை நேற்று முன் தினம் இரவு வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. அதனையும், வனத்துறை அதிகாரிகள் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுச் சென்று விட்டனர்.