தெலங்கானாவில் இளம் பெண்ணுக்கு பேய் ஒட்டிய மந்திரவாதி, அடித்துத் துன்புறுத்தியதால் இளம் பெண் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம் கரிம் நகரைச் சேர்ந்த மல்லேஸ், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த அஜிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, அவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்த நிலையில், தற்போது பேய் என்ற பெயரில் புதிய பிரச்சனை வந்துள்ளது. அதாவது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மல்லேஸ் - அஜிதா தம்பதிக்கு, ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அஜிதாவுக்கு குழந்தை பிறக்கும் போது, வெறும் 21 வயது மட்டுமே நடப்பதால், அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டுள்ளார்.

இதனால், மனைவி அஜிதாவுக்கு பேய் பிடித்துவிட்டது என்று நினைத்த அவரது கவர் மல்லேஸ், இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால், பழமையான சடங்குகள் மூலம் அவரை குணப்படுத்தக் கணவர் மல்லேஸ் மற்றும் அவரது பெற்றோர் முடிவு செய்தனர். 

அதன்படி, மனைவி அஜிதாவுக்கு உள்ள பிரச்சனை குறித்து. அதே பகுதியைச் சேர்ந்த மந்திரவாதி ஷ்யாம் என்பவரிடம் கூறி ஆலோசனை கேட்டுள்ளனர்.

இதனைக் கேட்டுக்கொண்ட ஷ்யாம், “அஜிதாவுக்கு பேய் தான் பிடித்திருக்கிறது. நானே நேரில் வந்து ஓட்டி விடுகிறேன்” என்று கூறி உள்ளார்.

அதன்படி, கடந்த 2 ஆம் தேதி மாலை மந்திரவாதி ஷ்யாம் மற்றும் அவரது உதவியாளர் பாபா ரவீந்தரும் அஜிதா வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு, அஜிதா மிகவும் சோர்ந்து காணப்பட்டுள்ளார். 

அதனைத் தொடர்ந்து, அஜிதாவை தங்கள் முன்னாடி அமர வைத்து, சில சடங்குகளையும் அவர்கள் செய்துள்ளனர். ஆனாலும், அஜிதாவின் உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை.

அதன் தொடர்ச்சியாக, அஜிதாவின் தலை முடியைப் பிடித்து அதட்டலாகவும், மிரட்டலாகவும் கேள்வி கேட்ட மந்திரவாதி ஷ்யாம், அஜிதாவை கண்ணத்தில் மாறி மாறி அரைந்துள்ளார். அதில், வலி தாங்க முடியாமல் அஜிதா கதறி அழுதுள்ளார். 

மேலும், மந்திரவாதி ஷ்யாம் தொடர்ந்து தாக்கியதில், ஒரு கட்டத்தில் அஜிதாவின் பின்னத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி கட்டிலில் சரிந்தார்.

இதனால், பயந்துபோன அஜிதாவின் கணவன்  மல்லேஸ், அருகில் உள்ள தனியார்  மருத்துவமனையில் மனைவியை அனுமதித்தனர். அப்போது, அஜிதா சுய நினைவு இழந்ததாகவும் கூறப்படுகிறது. அங்கு, அஜிதாவுக்கு கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து சிக்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனால், அதிர்ச்சியடைந்த மல்லேஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மந்திரவாதி ஷ்யாம் மற்றும் அவரது உதவியாளர் பாபா ரவீந்தர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், உயிரிழந்த அஜிதாவின் கணவர் மல்லேஸிசிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இதனிடையே, இளம் பெண்ணுக்குப் பேய் பிடித்திருப்பதாகக் கூறி, பேய் ஒட்டிய மந்திரவாதி, அடித்துத் துன்புறுத்தியதால் இளம் பெண் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.