ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டமானது, இன்று (டிசம்பர் 4) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது,

``வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 4 சதவீதமாக தொடரும். இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் 3.35 சதவீதமாக நீடிக்கும். வட்டி விகிதத்தை மாற்றாமல் நீடிக்க, நிதிக்கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக வாக்களித்தனர்.
 
2021ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.5 சதவீதமாக இருக்கும். வருங்காலங்களில் நகர்ப்புறங்களில் தேவை அதிகரிக்கும், கிராமங்களிலும் தேவை அதிகரித்துள்ளது. மூன்றாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 0.1% ஆகவும்,  நான்காம் காலாண்டுக்கு 0.7% ஆகவும் இருக்கும் என கணித்துள்ளோம்" என்று கூறினார்.

இதன்மூலம் அடுத்த (2020 - 21) நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.1% வளர்ச்சி காணலாம், நான்காவது காலாண்டில் 0.7% வளர்ச்சி காணலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டு இருக்கிறார். 2020 - 21 நிதி ஆண்டு முழுமைக்குமான உண்மையான ஜிடிபி மைனஸ் 7.5 சதவீதமாக சுருங்கலாம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

ரெப்போ விகிதம் மாற்றப்படாததால் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காது. இது, பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். ரெப்ரோ விகிதம் என்பது, இந்திய ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளிடம் இருந்து பெறும் பணத்துக்கு கொடுக்கும் வட்டி.

ரெப்போ விகிதம் மாறினால் ஏற்படும் மாற்றங்கள் - பொதுவாக ரிசர்வ் வங்கி தன் ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தால், நாம் வங்கிகளில் வாங்கும் கடன்களின் வட்டி விகிதங்கள் குறையும். ஏற்கனவே வாங்கி இருக்கும் கடன்களுக்கு நாம் செலுத்தும் வட்டி குறையும். அதோடு வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்து இருந்தால், அதற்கான வட்டி விகிதங்களும் குறையும்.

இதுவே ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி அதிகரித்தால், வங்கிகளில் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதங்களும் அதிகரிக்கும், அதே போல, ஏற்கனவே நாம் வாங்கி இருக்கும் கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும். ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கலாம்.

இந்தியாவின் மத்திய வங்கியான ஆர்பிஐயின் ரெப்போ வட்டி 4 சதவீதமாக இருக்கிறது. சில நாடுகள் இந்த வட்டி விகிதத்தை பாலிசி விகிதர் என்று அழைக்கிறார்கள். டிரேடிங் எகனாமிக்ஸ் என்கிற வலைதளத்தில் காணப்படும் தகவலின்படி, ஜப்பானின் பாலிசி விகிதம் 0.1%, பிரிட்டனின் பாலிசி விகிதம் 0.1%, அமெரிக்காவின் பாலிசி விகிதம் 0.25%, ரஷ்யாவின் பாலிசி விகிதம் 4.25% ஆக இருக்கின்றன.