மத்திய பிரேதசத்தில் 100 ரூபாய் லஞ்சம் தர சிறுவன் மறுத்ததால், பாவப்பட்ட சிறுவனின் முட்டை வண்டியை மாநகராட்சி அதிகாரி கவிழ்த்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகின் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்குக் கணக்குக் காட்டும் சிறு குறு நிறுவனங்களுக்கு உதவ மத்திய அரசு முன் வந்திருந்தாலும், தெருவோர கடைகள் மற்றும் குடிசை தொழில் செய்வோர், தள்ளு வண்டி கடை நடத்தும் வியாபாரிகள் நிலை மிகப் பெரிய கேள்விக் குறியாக மாறி உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் பெரிய பெரிய நிறுவனங்களில் பணியாற்றியவர்கள், ஆசிரியர் வேலை பார்த்து வந்தவர்கள் என்று சிலர் தங்கள் சொந்த ஊர்களிலேயே தற்போது தள்ளு வண்டிகளில் நடமாடும் கடைகளை நடத்தி வருமாம் பார்க்க முயன்று வருகின்றனர். ஆனால், ஒரு சில அரசு அதிகாரிகள், 

மனசாட்சியை மண்ணில் போட்டுப் புதைத்துவிட்டு, மனிதம் செத்துப் போய் விட்டது என்பது போல் அப்பாவி தொழிலாளர்களிடம் நடந்துகொள்ளும் விதம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதற்குச் சாட்சி சொல்லும் விதமாகத் தான் மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் ஒரு மனசாட்சி அற்ற சம்பவம் நடந்துள்ள, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில், தள்ளு வண்டியில் சிறுவன் ஒருவன் முட்டை வியாபாரம் செய்து வந்துள்ளான். அங்கு வந்த அந்த மாநில மாநகராட்சி அதிகாரி ஒருவர், அந்த பாவப்பட்ட சிறுவனிடம் 100 ரூபாய் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. இல்லை என்றால், கடையை காலி செய்யச் சொல்லி அந்த அதிகாரி வற்புறுத்தி உள்ளார். ஆனால், விபரம் அறியா அந்த சிறுவன் லஞ்சமும் கொடுக்காமல், கடையையும் காலி செய்ய மறுத்ததாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அந்த மாநகராட்சி அதிகாரி, கொஞ்சம் கூட இறக்கம் இல்லாமல், கருணை இல்லாமல் அந்த சிறுவன் நடத்தி வந்த முட்டை தள்ளு வண்டி கடையைப் புரட்டிக் கவிழ்த்து விட்டார். இதனால், அதில் இருந்த நூற்றுக்கணக்கான முட்டைகள் முழுவதுமாக கீழே விழுந்து உடைந்து சேதமானது.

இதனையடுத்து, அந்த சிறுவன் மனம் நொந்து அங்கேயே கத்தி கதறி அழுகிறார். அதனை பார்த்தபடியே, அந்த மாநகராட்சி அதிகாரி அங்கிருந்து செல்கிறார். இந்த காட்சிகளை அங்கு நின்றிருந்தவர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இந்திய அளவில் வைரலாகி வருகிறது.

இதன் காரணமாக, மனசாட்சி இன்றி செயல்பட்ட அந்த மாநகராட்சி அதிகாரிழய கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், அந்த மாநகராட்சி அதிகாரியின் வேலை பறிபோகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.