“இது முத்தமிடக்கூடாத பகுதி” என்று, காதலர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக குடியிருப்பு வாசிகள் எழுதி வைத்த சம்பவம், காதலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை மாநகரில் தான் இப்படி ஒரு விநோத சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளில் காதலர்கள் பெரும்பாலும் நடு ரோட்டிலேயே நின்று ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சிகள் எல்லாம் சர்வ சாதாரணமாக அரங்கேறுவதுண்டு. 

இப்படியான மேல்நாட்டுக் கலாச்சாரம் இந்தியாவில் எப்படியோ, எப்போதே உட்புகுந்து கொண்டு வெகு நாட்கள் ஆகிறது. இதன் காரணமாக, இந்த வெளிநாட்டுக் காதல் மோகம், மும்பை, டெல்லி போன்ற குறிப்பிட்ட சில நாகரங்களில் பரவலாகக் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

தற்போது, அது உண்மை என்று மெய்ப்பிக்கும் வகையிலும், காதலர்கள் அத்துமீறி தொடர்ந்து செயல்படுவதைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், “இது முத்தமிடக்கூடாத பகுதி” என்று, காதலர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக குடியிருப்பு வாசிகள் எழுதி வைத்த சம்பவம், மும்மை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  
மும்பையில் உள்ள போரிவலி என்னும் பகுதியில், “சத்யம் சிவம் சுந்தரம்” என்னும் குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் பல குடும்பங்கள்  வசித்து வருகின்றனர்.

இந்த “சத்யம் சிவம் சுந்தரம்” என்னும் குடியிருப்பு பகுதியில், அதாவது கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகான நாட்களில், இப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் மாலை 5 மணி முதல் இரவு வரை காதல் ஜோடிகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்து நின்றுகொண்டு மிகவும் நெருக்கமாக இருப்பதை, அந்த குடியிருப்பு வாசிகள் பலரும், பல முறை கண்டு முகம் சுளித்திருக்கிறார்கள். 

அத்துடன், இது போன்ற காதல் காட்சிகள் எல்லாம் அந்த பகுதியில் தொடர்ந்து அதிகரித்து எல்லை மீறி போகவே, சம்மந்தப்பட்ட குடியிருப்பு வாசிகள், “காதலர்களின் இந்த முத்தக் காட்சிகளை வீடியோவாக எடுத்து” அங்குள்ள காவல் நிலையத்தில் புகாராக அளித்திருக்கிறார்கள். 

ஆனால், போலீசார் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், அந்த குடியிருப்பு வாசிகள் தாங்களாகவே முன் வந்து, அசோசியேஷன் மீட்டிங் நடத்தி, காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்தனர்.

அதன் படி, “சத்யம் சிவம் சுந்தரம்” என்னும் குடியிருப்பு பகுதியில், காதலர்கள் முத்தமிடுவதை முற்றிலுமாக தடுக்கும் விதமாக, “இது முத்தமிடக்கூடாத பகுதி” என்று, ஒரு வாசகத்தை எழுதி அந்த பகுதியில் பல இடங்களிலும் கண்ணில் படும் படி வைத்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படம், அந்த பகுதி முழுவதும் வைரலாகி, அந்த பகுதிக்கு ரெகுலாக வரும் காதலர்கள் தற்போது அங்கு வருவது குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குடியிருப்பாளர் கைலாஷ்ராவ் தேஷ்முக், “நாங்கள் காதலர்கள் மற்றும் முத்தத்திற்கு எதிரானவர்கள் அல்ல” என்று, சுட்டிக்காட்டி உள்ளார். 

“ஆனால், எங்கள் வீடுகளுக்கு வெளியே உள்ள வளாகத்தை ஒரு முத்த மண்டலமாக மாற்றுவதை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றும், குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்கள் வீட்டு ஜன்னல்களுக்கு வெளியே தினசரி நடக்கும் இது போன்ற முத்த ரொமான்ஸ் காட்சிகளால் மிகுந்த சங்கடத்துக்கு ஆளாகி வருகின்றனர்” என்றும், கவலைத் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, “எச்சில் துப்பக்கூடாது”, “புகை பிடிக்கக் கூடாது”, “மது அருந்தக்கூடாது” போன்ற வாசகங்கள் பல இடங்களில் எழுதி வைக்கப்படுவது போலவே, “இது முத்தமிடக்கூடாத பகுதி” என்பது புதிதாக எழுதி வைக்கப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பேசும் பொருளாகவும் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.