சாதி அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும் குடியிருப்புப் பகுதிகள், இடங்கள், சாலைகளின்   பெயர்களை மாற்ற மகாராஷ்ட்ரா அரசு முடிவு செய்துள்ளது. சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் யார் மீதும் பாகுபாடு காட்டக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. புதன்கிழமை நடந்த மகாராஷ்ட்ர மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


சாதி மத அடிப்படையில் பேதம் காட்டக் கூடாது என்பதை மனதில் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும். சாதிய பெயர்களில் இருந்த தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளின் பெயர்கள் தற்போது மாற்றி , சுதந்திர போராட்ட வீரர்கள், சமூக சீர்திருத்தவாதிகளின் பெயர்கள் வைக்கப்படும் என்று கூறியுள்ளது உத்தவ் தாக்ரே அரசு.


மகாராஷ்ட்ர மாநில அரசின் இந்த முடிவை குறித்து திமுக தலைவர் மு. க ஸ்டாலின், ‘’ பெரியார் மண்ணிலிருந்து  கலைஞரின் உடன்பிறப்பாக இதயப்பூர்வமாக மகாராஷ்ட்ரா அரசின் இந்த முடிவை வரவேற்றுப் பாராட்டி மகிழ்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். ஜோதிராவ் புலே, சாகு மகராஜ், அம்பேத்கார் போன்ற மாபெரும் சமுதாய சீர்திருத்த சிந்தனையாளர்களை வழங்கிய பெருமை மராட்டிய மண்ணிற்கு உண்டு. அவர்களின் சிந்தனைகளுக்கு காலத்திற்கேற்ற செயல்வடிவம் தருகிறது சிவசேனா காங்கிரஸ் அரசு. குடியிருப்புகளுக்கு முன்பு இடப்பட்ட சாதிப் பெயர்களை நீக்கி மாற்றாக சமதா நகர், பீம் நகர், ஜோதி நகர், சாரு நகர், கிராந்தி நகர் என்று புதுமைப் பெயர்கள் சூட்டப்படும் என்ற மராட்டிய அரசின் முற்போக்கான முடிவு வரவேற்புக்குரியது. 


சாதிய பாகுபாடுகளை அகற்றிய சமூக நீதிக்கு தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலம். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அந்த மாற்றங்களை விதைத்தனர். அனைத்து மாநிலங்களிலும் இந்த வகையான மாற்றங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட வேண்டும். முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்துகள் ! ” என ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார்.