கேரளாவில் பருவகால மழையின் காரணமாக பல பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக மிகுந்த கனமழை பெய்து வருகிறது.  இதனால், மாநிலத்தின் நகரங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிலாம்பூர் பகுதியில் தொடர் கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து, தெருக்களில் தேங்கி நிற்கிறது.

கடந்த 3 நாட்களாக, தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கேரளாவை துன்பத்தில் தள்ளியுள்ளது. குறிப்பிட்டு சொல்லும்படியாக, கடந்த 2 தினங்களாக தொடர்ச்சியாக வயநாடு பகுதிகளிலும் கேரள மாநிலம் இடுக்கி பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக வயநாடு முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குடியிருப்பு பகுதிகள், ஆறுகள் உள்ளிட்டவைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் நேற்று முழுவதுமாக பெய்த கனமழையால் கேரள மாநிலம் மூணாறு மாவட்டத்தில் ராஜமலை என்ற பகுதியில் பெரியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் புதைந்துவிட்டன. இதில் சிக்கி 80 பேர் மாயமாகியுள்ளனர். அந்த 80 பேரின் நிலை என்னவென்று இப்போதுவரையில் தெரியவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில் அங்கிருந்து தப்பி வந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் தற்போது ராஜமலை பகுதியில் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதிக்கு செல்லக்கூடிய பாலம் அடித்து செல்லப்பட்டிருப்பதால் மீட்புப்பணியினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இடுக்கி மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் சேற்றில் சிக்கியுள்ள 80 பேரை மீட்கும் பணியில் அதிகாரிகளும், வனத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள சேற்றுக்குள் 20 வீடுகள் புதையுண்டு உள்ளதாக மீட்புடையினர் தகவல் தெரிவித்துள்ளனர்

கேரளாவின் இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு பகுதிகளில் வரும் 11ந்தேதி வரை தீவிர கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் ஆபத்து நிலையை குறிப்பிடும் சிவப்பு வண்ண எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

தற்போதய செய்திப்படி, நிலச்சரிவில் சிக்கியவர்களில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதுவரை 10 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

சம்பவ பகுதிக்கு போலீசார், தீயணைப்பு துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளனர்.  மீட்பு பணியை துரிதப்படுத்தும்படி வனம் மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளை கொண்ட பகுதியாகும்.  இதுவரை 3 குடும்பங்கள் சிக்கி கொண்டுள்ளன என்று இடுக்கி போலீஸ் சூப்பிரெண்டு பத்திரிகையாளர்களிடம் கூறியிருக்கிறார்.

வயநாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிச்சியார்மலா பகுதியில் மழை மற்றும் நிலச்சரிவுகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.  2 வீடுகள் சேதமடைந்து உள்ளன.  

கேரளாவை போலவே, கர்நாடகாவும் பருவகால மழையின் தீவிரத்தினால், தீவிரமான இயற்கை பேரிடரை சந்தித்து வருகிறது.

கர்நாடகத்தின் சுவிட்சர்லாந்து என்றழைக்கப்படும் குடகு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால், குடகு மாவட்டமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக பாகமண்டலா, தலைக்காவிரி பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் பாகமண்டலாவில் உள்ள திரிவேணி சங்கமம் கடல்போல காட்சி அளிக்கிறது.

தலைக்காவிரியில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், காவிரி ஆற்றங்கரையொட்டி வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றங்கரையையொட்டி இருக்கும், கொண்டங்கேரி, உய்யா, கூடுகத்தே, கரடிகோடு உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. கரடிகோடு கிராமத்தை சேர்ந்த 12 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பள்ளி கட்டிடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, போர்வை, படுக்கை உள்ளிட்ட வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர். குஷால்நகர் சாய் லே-அவுட் பகுதியில் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

மேலும் குடகு மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் 3 நாட்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் அங்கு கிராமங்களில் இருளில் மூழ்கி உள்ளன.

கனமழை காரணமாக, தமிழகத்துக்கான அணைகள் அனைத்திலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.