கர்நாடகாவில் பல மாவட்டங்களில், குறிப்பாக கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் நதிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வெள்ளம் வராமல் இருக்கவும், தண்ணீரை வெளியேற்றவும் உத்தர் கன்னட மாவட்டத்தில் உள்ள பெரிய அணையை மாநில அரசு திறந்துள்ளது. இதேபோல், மற்ற அணைகளிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. '

பல நதிகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் அளவு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் எடியூரப்பா தொடக்க நிலை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.50 கோடி நிதியை விடுவித்துள்ளார். 

காவிரி ஆற்றின் மூலமான கொடகுவில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

இந்நிலையில் ``கடந்த இரண்டு, மூன்று நாட்களில் இப்பகுதியில் பெய்த மழையால் உடுப்பி, தட்சிணா கன்னடம், உத்தர கன்னடம், சிக்கமங்களூர், சிவ்மோகா, குடகு மற்றும் ஹாசன் உள்ளிட்ட இடங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது" என்று இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் சி.எஸ்.பாட்டீல் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு, கர்நாடகா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கவிழ்ந்ததால், பொறுப்பேற்ற எடியூரப்பா முதல் பணியாக வெள்ள நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட மாவட்டங்களுக்குச் சென்றார். இந்த ஆண்டு, எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று தற்போது உறுதியாகியிருப்பதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.

இந்த வருட மழை ஏற்படுத்திய பாதிப்பானது, கர்நாடகா மட்டுமன்றி அதன் அண்டை மாநிலமான மகராஷ்டிராவிலும் தாக்கத்தை காட்டியுள்ளது. பெய்த பலத்த மழையால் மும்பை பகுதியே முடங்கியது. தற்போது அங்கு நிலைமை மேம்பட்டு, புறநகர் ரயில்கள் இயங்கினாலும், இன்றும் அதிக மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. 

இந்நிலையில் இன்றைய தினம், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அமைச்சர்களுக்கு முதல்வர் எடியுரப்பா உத்தரவிட்டுள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவித்துள்ளது.

இது குறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறுகையில், ``கர்நாடக மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், மக்களுக்கு நிவாரண பொருள்களை விநியோகம் செய்யுமாறும் கூறியுள்ளேன்.

மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அவசர நிவாரணப் பணிகளுக்காக ரூ. 50 கோடியை விடுவித்து உத்தரவிட்டுள்ளேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அமைச்சர்கள் முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன். 

மேலும், நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் நிதி  தேவைப்படின் அதை விரைவில் வழங்குவதாக உறுதியளித்துள்ளேன்" என்றுள்ளார்.

மாநிலம் முழுவதும் மழைப்பொழிவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தலைமைச் செயலாளருக்கு முதல்வர்  அதிகாரப்பூர்வ உத்தரவும் பிறப்பித்துள்ளார். சிகிச்சையில், ஓய்வில் இருக்கும் காலத்திலும், மாநிலத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் எடியூரப்பா.

இன்னொரு பக்கம், கர்நாடகாவின் இந்த தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக, நீர்வரத்து அதிகரித்ததால், கபினி அணையில் இருந்து வினாடிக்கு, 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

கபினி அணையின் மொத்த நீர்மட்டம், 65 அடி. கொள்ளளவு, 19.5 டி.எம்.சி., கர்நாடகா - கேரளா எல்லையிலுள்ள, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், நேற்று முன்தினம், 10 ஆயிரத்து, 500 கன அடியாக இருந்த, கபினி நீர்வரத்து, நேற்று, 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அதற்கேற்ப, அணை நீர் இருப்பு, 17 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, நேற்று முன்தினம் காலை, 10 ஆயிரத்து, 500 கன அடியாக இருந்த கபினி நீர் திறப்பு, இரவில், 32 ஆயிரம் கன அடி, நேற்று காலை, 11:00 மணிக்கு, 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.அதேபோல, கே.ஆர்.எஸ்., அணையின் மொத்த நீர்மட்டம், 124 அடி; கொள்ளளவு, 49 டி.எம்.சி., நேற்று அணையின் நீர்மட்டம், 107 அடி, நீர் இருப்பு, 28 டி.எம்.சி.,யாக இருந்தது. நேற்று வினாடிக்கு, 20 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து, 1,500 கன அடி நீர் மட்டும் வெளியேற்றப்பட்டது. கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, வினாடிக்கு, 41 ஆயிரத்து, 500 கன அடி நீர் வெளியேற்றுவதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம், 64.15 அடி, நீர் இருப்பு, 27.87 டி.எம்.சி., யாக இருந்தது. வினாடிக்கு, 3,613 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட நீர், இன்று மாலை மேட்டூர் அணையை வந்தடையும் என்பதால், வரும் நாளில், மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்படுகிறது