இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு, வெளிநாட்டு தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவைத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு தொடர்ச்சியாக இன்று 11 வது நாளாகப் போராடி மத்திய அரசுக்கு, தங்களது கடும் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்ட களத்தில், அடுத்தடுத்து உயிரிழப்புகள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவது. போராட்டத்தில் கலந்துகொண்டு வரும் வயது முதிர்வான விவசாயிகள் தற்போது அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 6 விவசாயிகள் வரை போராட்ட களத்தில் அடுத்தடுத்து உயிரிழந்து உள்ளனர். 

முக்கியமாக, விவசாயிகளின் பிள்ளைகள் பலரும் விவசாயிகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டே, ஆன்லைனில் பாடமும் படித்து வருகின்றனர். இந்த காட்சிகள் எல்லாம் தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதனால், இந்த சம்பவங்களைப் பார்க்கும் நாட்டு மக்கள் மத்தியில் ஒரு வித உணர்ச்சியைத் தூண்டி விடப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதே போல், இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்குப் பல வெளிநாட்டு தலைவர்களும் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன் படி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, “அமைதியான போராட்டம் நடத்தும் உரிமையை கனடா எப்போதும் ஆதரிக்கும்” என்று குறிப்பிட்டார்.

அத்துடன், “இந்தியாவில் போராடி வரும் விவசாயிகள் நிலை குறித்தும் அவர் கவலை” தெரிவித்தார். சில கனடா மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களும் இது போன்ற கருத்துக்களைத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, இந்தியாவுக்கான கனடா தூதருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி தனது கண்டனத்தைத் தெரிவித்தது. அவரை வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து, அவரிடம் கனடா பிரதமரின் கருத்துக்காக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது” என்றும், தகவல்கள் வெளியானது. 

அது மட்டும் இல்லாமல், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கனடா பிரதமர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், கனடா அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரத்து செய்துள்ளார் என்றும், தகவல்கள் வெளியானது.

கனடா பிரதமரும், அந்நாட்டு அரசியல் தலைவர்களும் தெரிவித்த கருத்துகளை, இந்தியாவின் உள் விவகாரங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத தலையீடாகக் கருதுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டது. 

மேலும், இதே நிலை நீடித்தால், இருதரப்பு உறவுகளும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது. 

இந்நிலையில், இரு தரப்பு உறவு பாதிக்கப்படும் என இந்தியா எச்சரிக்கை விடுத்தது பற்றி செய்தியாளர்கள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஜஸ்டின் ட்ரூடோ, “உலகின் எந்த மூலையிலும் நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கும் கனடா துணை நிற்கும்.  போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பேச்சு வார்த்தை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

இந்தியா மிக கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையிலும், கனடா பிரதமர் மீண்டும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டது.

மிக முக்கியமாக, இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 36 எம்.பி.க்கள் இந்திய விவசாயின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளனர்.

அதே போல், “மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது என்றும், அவர்கள் அமைதி வழியில் போராட அனுமதிக்க வேண்டும்” என்றும், விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா. கருத்து தெரிவித்து உள்ளது.

இதனால், டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம், தற்போது சர்வதேச கவனத்தையும் ஈர்க்க தொடங்கி உள்ளது. அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் எந்த முடிவும் கிடைக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அங்கு இருந்தபடியே, இந்திய அரசுக்கு எதிராக பேராடி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஐநா அமைப்பு விவசாயிகள் போராட்டம் குறித்து முதன் முதலாக கருத்து கூறி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன்ஸ்டீபன் கூறும் போது, “உலக மக்கள் அனைவருக்கும் அமைதியாகப் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. இதனால் அரசுகள், அதிகாரிகள் மக்களை அமைதியாகப் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று, குறிப்பிட்டார். 

அதே நேரத்தில், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்றும், இது தேவையற்றது என்றும், இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், கனடா அதிபர் மற்றும் ஐநா அமைப்பு விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளது” உலக அளவில் பெரிய அளவில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

அதே போல், விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட சென்ற ஷாகின்பாக் போராளி பில்கிஸ் தாதியை போலீசார் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். 

இதனிடையே, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வேளாண் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து விவாதிக்கும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.