ஆந்திராவில் 13 வயது தன் சொந்த தங்கையை பாலியல் தொழிலுக்காக, அந்த கும்பலிடம் அண்ணனே விற்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிங்காரயகொண்டா நகரில் தான், இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியான அமுதாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தந்தைக்கு மொத்தம் 2 மனைவிகள். இதில், அமுதா 2 வது மனைவியின் மகள் ஆவார். முதல் மனைவிக்கு ஒரு மகன் உள்ளார்.

இதனிடையே, முதல் மனைவிக்கும் - 2 வது மனைவியின் குடும்பத்திற்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. இதனை அமுதாவின் தந்தை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். 

ஒரு கட்டத்தில் இரண்டு குடும்பத்திற்குமான சொத்து சண்டை அதிகரித்துக் காணப்படவே, 2 வது மனைவி தன் மகள் அமுதாவை அழைத்துக்கொண்டு, அங்குள்ள நெல்லூர் மாவட்டத்தின் காவலியில் போய் தங்கி உள்ளனர்.

இதனையடுத்து, இந்த சொத்து பிரச்சனைக்கு முடிவு கட்ட நினைத்த முதல் மனைவியின் மகனும், அவருடைய மனைவியும் சேர்ந்து திட்டம் போட்டனர். 

அதன்படி, முதல் மனைவியின் மகனும், அவருடைய மனைவியும் சேர்ந்து தங்கை அமுதாவைத் தேடி கடந்த 12 ஆம் தேதி நெல்லூர் மாவடத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு அமுதாவின் தாயார் வேலைக்கு சென்றிருந்த நிலையில், தங்கை அமுதா மட்டும் வீட்டில் இருந்த உள்ளார்.

அப்போது, சிறுமியின் அண்ணனும், அவரது மனைவியும் சேர்ந்து சிறுமியிடம் ஆசையாகப் பேசி, அவரை வெளியே கூட்டிச்செல்வது போல்,  அங்குள்ள பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிங்காரயகொண்டாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

அங்குச் சென்றதும், அந்த பகுதியில் செயல்படும் விபச்சார கும்பலிடம், தன் தங்கை அமுதாவை வெறும் 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். அதன் பிறகு, அவர் வீடு திரும்பி எதுவும் தெரியாதது போல் இருந்துள்ளார்.

அமுதாவின் தாயார் வீடு திரும்பிய நிலையில், மகளைக் காணவில்லை என்று, அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்துவிட்டு, அவரின் தந்தைக்கும் தகவல் கூறி உள்ளார். அத்துடன், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தேடி வந்தனர்.

இந்நிலையில், விபச்சார கும்பலிடம் விற்கப்பட்ட சிறுமி, 6 நாட்கள் கழித்து, அதாவது கடந்த 18 ஆம் தேதி அங்கு வந்த யாரிடமோ போனை வாங்கி போலீஸ் அவசர எண் 100 க்கு போன் செய்து, “நான் விபச்சார கும்பலிடம் மாட்டிக்கொண்டதாகவும், என்னை வந்து மீட்டுச் செல்லுங்கள்” என்றும் அவர் கூறி உள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், சிறுமியை மீட்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. அதன்படி, விபச்சார கும்பலிடம் இருந்து சிறுமியை மீட்க போலீசார் ரகசிய நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி, சிறுமி போன் செய்த இடத்தை கண்டுபிடித்து, போலீசார் அந்த இடத்திற்கு மப்டியில் வந்து, அங்கு அடைக்கப்பட்டு இருந்த சிறுமையைப் பத்திரமாக மீட்டனர். அத்துடன், அங்கிருந்த சிலரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 

மேலும், சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சொந்த அண்ணனே தங்கையை விபச்சார கும்பலிடம் விற்கப்பட்டது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், போக்சோ சட்டம், ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து, விபச்சார விடுதி நடத்தி வந்த வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். 

எனினும், சிறுமியின் அண்ணன் மற்றும் அவரது மனைவி மீது இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து போலீசார் எந்த கருத்தும் கூற மறுத்துவிட்டனர்.

இதனிடையே, 13 வயதுடைய சொந்த தங்கையை பாலியல் தொழிலுக்காக, அந்த கும்பலிடம் அண்ணனே விற்ற சம்பவம், ஆந்திராவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.