பெகாசஸ் உளவு சர்ச்சை விவகாரத்தில் நாடாளுமன்றம் 11 வது நாளாக முடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, மற்றொரு புறம் எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பது குறித்த பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட ஒட்டுமொத்தமாக 300 இந்தியர்களின் போன்கள்
ஒட்டுக்கேட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி, ஒட்டுமொத்த இந்திய அரசியலை நடுங்க வைத்துள்ளது.. 

இதனால், இந்திய அரசியலில் தற்போது அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறி, இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் எல்லாம் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. 

இதன் காரணமாக, பெகாசஸ் என்னும் உளவு மென்பொருள் விவகாரம் சர்வதேச அளவில் மிகப் பெரிய பூகம்பமாக வெடித்து உள்ளது.

அத்துடன், “இந்த போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில், மத்திய அரசுக்குத் தொடர்பு உள்ளதா என்று, உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து முடக்கி வருகின்றன. ஆனால், எதிர்க்கட்சியின் இந்த முக்கிய கோரிக்கையை பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து ஏற்க மறுத்து வருகிறது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் விதமாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்போது களமிறங்கி உள்ளார்.

அதன் படி, டெல்லியில் இருக்கும் கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் எதிர்க் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்குமாறு 17 எதிர்க்கட்சிகளுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார்.

இந்தக் கூட்டத்தில், ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, தேசிய மாநாடு கட்சி, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதாதளம்,  ஜே.எம்.எம், இடது சாரிகள் உள்ளிட்ட பல முக்கிய எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டன.

அதில், திமுக சார்பில் எம்.பி. கனிமொழி, சிபிஎம் எம்.பி சு. வெங்கடேசன், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, வசந்த குமார் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பெகாசஸ் விவாகரத்தில் எதிர்க் கட்சிகள் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், சபை நடவடிக்கைகளை நடத்த விடாமல் எதிர்க் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், இன்றுடன் நாடாளுமன்றம் 11 வது நாளாக முடங்கி உள்ளன.

ஒரு பக்கம் விவசாயிகள் பிரச்சனை, டெலிபோன் ஒட்டுகேட்பு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு சபைகளையும் நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றனர். இதனால், ஒவ்வொரு நாளும் சபை முடங்கி வருகிறது.

அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பது குறித்த பாஜக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசும்போது, “தினமும் முழக்கங்களை எழுப்பி நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன” என்று, பகிரங்கமாகக் குற்றச்சாட்டினார். 

குறிப்பாக, “நாடாளுமன்றத்தை எதிர்க் கட்சிகள் தொடர்ந்து அவமதிப்பதாகவும்” பகிரங்கமாக, மோடி குற்றம்சாட்டினார்.

முக்கியமாக, “நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பது குறித்த பாஜக எம்.பிக்களுடன் பிரதமர் மோடி, தீவிர ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.