டெல்லிக்கு ஆக்ஸிஜன் கொடுத்து உதவிடுமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.


இந்தியாவில் கொரோனாவின் ரெண்டாவது அலைக்கு பாதிப்புக்கு உள்ளான வட மாநிலங்களில் தலைநகர் டெல்லியும் ஒன்று. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மருத்துவ வசதிகளுக்கு திணறி வருகிறது டெல்லி மாநிலம். மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறைவாக இருப்பதால், வலுக்கட்டாயமாக நோயாளிகளை வெளிவேற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது.  


இதனால், டெல்லியில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் போதுமான அளவு இல்லை. தொடர்ந்து இதே நிலைமை நீடித்தால் நிலைமை சீரழிந்துவிடும். நாள் ஒன்றுக்கு 480 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில் 280 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மட்டுமே கிடைக்கிறது என்று டெல்லி மாநில முதல்வர் கூறியிருந்தார்.


இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ அனைத்து மாநில முதவல்வர்களையும் கேட்டுக்கொள்கிறேன். மாநிலங்களில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனில், உள்ளூர் தேவை போக எஞ்சியவற்றை டெல்லிக்கு கொடுத்து உதவிடுங்கள். மத்திய அரசு எங்களுக்கு உதவியபோதும், அந்த ஆக்ஸிஜன் எங்களுக்கு போதுமானதாக இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.