சீனாவுக்கு பதிலடி தரும் வகையில், லடாக் எல்லையில் இந்தியா மேலும் 50 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்துள்ளது எல்லையில் மேலும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் சீன ராணுவத்துடனான மோதலின் போது, கடந்த ஆண்டு இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து, இந்திய எல்லைப் பகுதியில் போர் விமானங்களை விமானப்படை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல், சீனாவும் இந்தியாவுக்கு முன்பாகவே, அங்கு 10 ஆயிரம் ராணுவ வீரர்களைக் குவித்து வைத்திருந்தது. இவற்றுடன், பல போர் வாகனங்களையும் அங்கு நிறுத்தி வைத்திருந்தது. முக்கியமாக, இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன. இதனால், இந்தியா - சீனா இடையே போர் மேகங்கள் சூழ்ந்தன.

மேலும், சீனாவுக்கு எதிரான போருக்கு இந்தியா தயாராகிவிட்டதாகவே அப்போது தகவல்கள் வெளியானது. ஆனால், அதன் தொடர்ச்சியாகச் சீனா பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று செய்திகள் பரவி வைரலாகி வந்தன. 

அப்போது தான், 20 இந்திய வீரர்களைக் கொன்ற சீனாவைப் பழிவாங்கவும், சீனாவுக்கு பாடம் கற்பிக்கும் விதமாகவும் சீனா நாட்டைச் சேர்ந்த டிக்டாக் உள்ளிட்ட முக்கிய செயலிகளை இந்திய அரசு அதிரடியாகத் தடை செய்தது.

அத்துடன், இது தொடர்பாக அப்போது பேசிய பிரதமர் மோடி, “பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம் என்றும், இந்தியாவிடம் அத்துமீறினால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுப்போம்” என்றும் சூளுரைத்தார்.

“நம் உரிமையில் எந்தவித சமரசமும் கிடையாது என்றும், நாட்டிற்காக நம் ராணுவ வீரர்கள் செய்த உயிர் தியாகம் ஒரு நாளும் வீணாகாது என்றும், நம்மை நாம் நிரூபிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இது, உலக அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இருநாட்டு ராணுவ அதிகாரிகள் தரப்பில் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, எல்லையில் இருந்து சீனா, தனது படைகளை ஓரளவுக்கு திரும்பப் பெற்றன. 

எனினும், சீன ராணுவத்தினரின் அத்துமீறலால், எல்லையில் அவ்வப்போது பதற்றம் நிலவுவதால் படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. 

குறிப்பாக, சீன எல்லைப் பகுதியில் 3 முக்கிய இடங்களில் போர் விமானங்களும் நிறுத்தப்பட்டு உள்ளன. சீன ராணுவம், கூடுதலான படையினரை திபெத்தில் இருந்து ஜிங்ஜியாங் ராணுவ தளத்துக்கு அனுப்பி உள்ளது. 

அங்கு, போர் விமானங்கள், நீண்ட தூரம் தாக்கும் பீரங்கிகள் போன்றவற்றையும் எல்லைப் பகுதியில் சீனா தற்போது நிறுத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், சீன எல்லையில் இப்போது 2 லட்சம் இந்திய வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். 

தற்போது அதன் தொடர்ச்சியாக, கூடுதலாக மேலும் 50 ஆயிரம் வீரர்களைச் சீன எல்லையில் நிறுத்த இந்தியா முடிவு செய்து உள்ளது. இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

இதனிடையே, காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமானப்படைத் தளம் மீது டிரோன்கள் மூலமாகப் பயங்கரவாதிகள் நேற்றைய தினம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.