வேற்று கிரகவாசிகளுடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

“ பேய் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி நமக்கு சிறு வயது முதலே இருக்கிறதோ, அதே போலவே வேற்று கிரகவாசிகள் நிஜமாலுமே இருக்கிறார்களா? இல்லையா?” என்ற கேள்வியும், நம்மிடம் எழாமல் இல்லை. அப்படியான வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு, கடந்த காலங்களில் விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்றே பதில் அளித்திருந்தார்கள்.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ விண்வெளிப் பிரிவின் முன்னாள் தலைவர் ஹைம் எஷெட் இஸ்ரேலிய பத்திரிகை ஜெருசலேம் போஸ்ட்டுக்கு அளித்து உள்ள ஒரு பேட்டியில், “வேற்றுகிரகவாசிகள் இருப்பது உண்மை தான்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“அவர்களுக்கான ஒரு கூட்டமைப்பு இயங்கி வருகிறது என்றும், வேற்று கிரகவாசிகளுடனான தகவல் தொடர்பு முன்னரே தொடங்கி விட்டது” என்றும், அவர்
கூறியுள்ளார். 

“பூமியில் சோதனை நடத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் வேற்றுகிரகவாசிகள் மேற்கொண்டுள்ளனர்” என்றும், அதிர்ச்சி தரும் தகவலையும்,
அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “இது பூமியை வேற்றுகிரகவாசிகள் ஆக்கிரமிப்பதற்கான முயற்சி அல்ல என்றும், இந்த பிரபஞ்ச விதிகளை புரிந்து கொள்வதற்கான தேடலில் அவர்கள் மனித குலத்தையும் உதவியாக சேர்த்துக் கொள்ள விரும்புகின்றனர்” என்றும், சுட்டிக்காட்டி உள்ளார்.

“வேற்றுகிரகவாசிகள் குறித்த தகவலை வெளியிட டிரம்ப் முயற்சித்தார் என்றும், ஆனால் மக்கள் அதற்கு தயாராகவில்லை என்று வேற்றுகிரகவாசிகள் தடுத்ததால் அந்த முயற்சி அப்படியே கை விடப்பட்டது” என்றும், ஹைம் எஷெட் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

அத்துடன், “செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகளுடன் இணைந்து அமெரிக்கா ஒரு நிலத்தடி தளத்தை அமைத்துள்ளது” என்று, குறிப்பிட்டுள்ள ஹைம் எஷெட், “அது தொடர்பான ஆதாரங்கள் ஏதுமின்றி நான் கூறும் தகவல்களை தற்போது யாரும் நம்பாமல் போகலாம் என்றும், ஆனால் விரைவில் மக்கள் உண்மையை புரிந்துகொள்ளும் நேரம் வரும்” என்றும், அவர் தெரிவித்துள்ளார். 

“மனித குலம் விண்வெளி மற்றும் விண்கலங்கள் என்ன என்பதை பொதுவாக நாம் புரிந்துகொள்ளும் ஒரு கட்டத்தை அடைவதற்கு அவர்கள் காத்திருக்கிறார்கள்” என்றும், அவர் கூறியுள்ளார். 

இதனிடையே, கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் கடந்த 2010 ஆம் ஆண்டு வரை இஸ்ரேலின் விண்வெளி பாதுகாப்புத் திட்டத்திற்கு ஹைம் எஷெட் தலைமை தாங்கி வழிநடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வேற்றுகிரகவாசிகளின் கூட்டமைப்புடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ விண்வெளிப்பிரிவின் முன்னாள் தலைவர் ஹைம் எஷெட் வெளியிட்டு தகவல், உலக அளவில் வைரலாகி வருவதுடன், உலக தலைவர்களிடையே இது பேசும் பொருளாக மாறி உள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.