சீனாவில், பதப்படுத்தப்பட்ட உறைந்த நிலையிலான உணவுப்பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த உணவுப்பொருள்களில் கொரோனா வைரஸ் இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானதால் அந்த இடங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.  
 
ஆனால், உணவு மற்றும் உணவு பேக்கேஜிங் வழியாக கொரோனா பரவுவதாக பயப்பட வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. எனவே உணவுச்சங்கியிலில் வைரஸ் நுழைவது பற்றி உலகச் சுகாதார அமைப்பு குறைத்து மதிப்பிட்டுள்ளதாக கருத்துக்கள் கூறப்படுகின்றன. 

அதாவது, சீனாவின் ஷென்சென் நகருக்குப் பிரேசிலில் இருந்து, உறைந்த நிலையில் உள்ள கோழி இறைச்சியின் இறைக்கைகளிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பிளில் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று வந்ததாகவும், மற்றொரு இறக்குமதியான இறால் உணவில் சீனாவின் ஷியான் நகரில் கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியிருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிக்கன் அரோரா என்ற நிறுவனத்துடையது பிரேசிலின் 3வது மிகப்பெரிய கால்நடை மற்றும் பன்றி இறைச்சி ஏற்றுமதி நிறுவனமாகும். உலகம் முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தப் புதிய கொரோனா கண்டுப்பிடிப்புகள் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

இதற்கிடையே கொரோனா இல்லாத நாடாக இருந்த நியூஸிலாந்தில் திடீரென தொற்று ஏற்பட்டதற்கும் இறைச்சி இறக்குமதிக்கும் தொடர்பிருக்கலாம் என்ற பயமும் ஏற்பட்டுள்ளது. -20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைரஸ்கள் 2 ஆண்டுகளுக்கு உயிருடன் இருக்கும். ஆனால் விஞ்ஞானிகள் தற்போது உணவுச்சங்கிலி மூலம் வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர்.

உலகச் சுகாதார அமைப்பின் அவசரநிலை திட்டத் தலைவர் மைக் ரயான் கூறுகையில், 'உணவு, உணவு பேக்கிஜ் அல்லது உணவு டெலிவரி ஆகியவை கண்டு பயப்பட வேண்டாம், யுஎஸ்.எஃப்டிஏ மற்றும் வேளாண் துறையினரும் உணவு அல்லது உணவு பேக்கேஜ் வழியாகவெல்லாம் வைரஸ் பரவாது' என்று கூறுகிறார். பிரேசில் நிறுவனமும் இது குறித்து உணவு மூலம் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.

இதற்கிடையே ஷென்சென் மருத்துவ அதிகாரிகள் உணவுப்பொருள் கொரோனா செய்தியை அடுத்து இதனுடன் தொடர்புடைய பலரை கண்டுபிடித்து டெஸ்ட் செய்தது, ஆனால் அனைவருக்கும் நெகெட்டிவ் என்று வந்துள்ளது. ஆனால் சிக்கனில் எப்படி கொரோனா பாசிட்டிவ், எந்த கட்டத்தில் வந்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இருப்பினும் கடல் உணவு மற்றும் இறக்குமதி இறைச்சிப் பொருளை உட்கொள்வதில் எச்சரிக்கையாக இருக்குமாறு ஷென்சென் மாகாண அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சீனாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்றுக்குக் காரணமாக வூஹான் நகரின் ஹுவானன் கடல் உணவு சந்தை காரணமாகக் கூறப்பட்டது. சீனா தேசிய உணவுப் பாதுகாப்பு மையத்தின் நுண் உயிரியல் பிரிவுத் தலைவர் லீ ஃபெங்க்வின் என்பவர், ஜூன் மாதம் கூறிய போது, கெட்டுப்போன பதப்படுத்தப்பட்ட உணவு மூலம் புதிய கிருமித் தொற்று சாத்தியம் உள்ளது என்று கூறியிருந்தார்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மிகப்பெரிய ஷின்ஃபாடி உணவுச்சந்தையில் கடந்த ஜூன் மாதம் தொற்று ஏற்பட்ட மையமாக இருந்தது. இன்று வரையில் கூட ஷின்ஃபாடி சந்தையில் எப்படி வைரஸ் நுழைந்தது என்பதை யாரும் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய சூழ்நிலையில், இறக்குமதி செய்யப்படும் உணவுகள் மூலம் கொரோனா தொற்று ஏற்படும் என்ற செய்தி புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.