சுதந்திர தினத்தை முன்னிட்டு கடல் மட்டத்தில் இருந்து 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ள லடாக் பகுதியில் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் 74வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதேபோல், தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராஜாஜி சாலையில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாநில அரசுகள், பொதுமக்கள், காவல்துறையினர், ராணுவத்தினர் என பல தரப்பினரும் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி, இந்திய-திபெத்திய எல்லைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள லடாக் பகுதியில் எல்லைக் காவல் படையினரால் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இந்தோ திபெத் எல்லைக் காவல்படை வீரர்கள் மூவர்ணக் கொடியை ஏந்தி அணிவகுப்பு மேற்கொண்டனர். பின்னர் அங்குள்ள பாங்காங்சோ என்ற ஏறியின் கரையில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தனர். அப்போது கையில் கொடி பிடித்து ஒரு ராணுவ வீரர் முன்னே செல்ல, மற்றவர்கள் பின்னே ‛பாரத் மாதா கி ஜே' என்ற குரல் எழுப்பிச் சென்றனர். பின்னர் ஐ.டி.பி.பி படையினர் பாடிய தேசபக்தி பாடல்கள் அடங்கிய தொகுப்பு வெளியிட்டனர்.