ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியோடிய அதிபர் அஷ்ரப் கானி, ஹெலிகாப்டர் மற்றும் 4 கார்களில் நிரப்பப்பட்ட பணத்துடன் பணத்தை நிரப்பிக்கொண்டு தப்பிச் சென்றதாக ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் தீவிரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தலீபான் தீவிரவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளனர்.

இதனால், ஆப்கானிஸ்தான் நாடானது, முழுவதுமாக தலீபான்கள் வசம் நேற்றைய தினம் சென்று விட்டது. உலக நாடுகள் யாவும், ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைத் திரும்ப அழைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, அங்கிருக்கும் காபூல் சர்வதேச விமான நிலையம் நேற்று முன்தினம் காலை முதலே பரபரப்பானது. அமெரிக்கா, காபூல் விமான நிலையத்தைப் பாதுகாப்பதற்காகக் கூடுதலாக 5,000 படைவீரர்களை அனுப்பி வைத்தது.

ஆப்கானிஸ்தானில் வசிக்கும் வெளிநாட்டினர் காபூல் விமான நிலையத்தில் திரண்ட நிலையில், தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால் பீதியடைந்துள்ள உள்நாட்டு மக்களும் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்காக, காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுத்தனர்.

பேருந்து படிக்கட்டுகளில் முண்டியடித்து ஏறுவது போல, விமானத்தில் ஏற நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் முயற்சிக்கும் காட்சிகள் நேற்றைய தினம் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது. இதனால், அங்கு கூட்டத்தைக் கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்று ஒடுதளத்தில் இருந்து புறப்பட்டதும், விமானத்தில் ஃபூட்போர்ட் அடித்த 3 பேர் அந்தரத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, காபூலில் இருந்து கத்தார் செல்லும் அமெரிக்க விமானப்படை காலி விமானத்தில் 640 பேர்கள் ஏறி அதில் பதுங்கிக்கொண்டனர். 

இதனையடுத்து, அவர்கள் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். 

இந்த நிலையில் தான், ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிய அதிபர் அஷ்ரப் கானி, கார்கள் மற்றும் ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணத்துடன் வெளியேறியதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, தலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்ததை அடுத்து, “அதிபர் அஷ்ரப் கானி, 4 கார்களில் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக்கொண்டு, ஹெலிகாப்டரிலும் பணக் கட்டுகளுடன் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக” ரஷ்ய தூதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

குறிப்பாக, “ஓமனுக்கு அஷ்ரப் கனி தப்பிச் சென்றதாகவும்” ரஷ்ய தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். மிக முக்கியமாக, “அஷ்ரப் கனியின் அலுவலகத்தில் மேலும் கட்டுக்கட்டாக பணம் இருந்தாலும், அதனை எடுத்துச் செல்ல முடியாத காரணத்தால், பணக்கட்டுகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததாகவும்” அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இன்னும் சில நாள்களில் அவர் அமெரிக்காவில் தஞ்சமடைவார்கள் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.