காதலி பிரிந்து சென்ற விரக்தியில் கோபம் அடைந்த காதலன், காதலியின் வீட்டுக்குள் புகுந்த கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூடநகரம் ரோடு வீர சிவாஜி தெருவைச் சேர்ந்த 60 வயதான சந்திரசேகர், இவர் மனைவி 47 வயதான சசிகலா தம்பதியினர் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்குத் திருமணமான நிலையில், 3 வது மகள் 22 வயதான மேனிஷா, தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

அதே போல், குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்த 29 வயதான முகேஷ் என்ற இளைஞர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 

இந்த முகேஷ் என்ற இளைஞரும், சந்திரசேகரின் மகள் மேனிஷாவும், கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்து உள்ளனர். ஆனால், காதலர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அந்த பகுதியில் உள்ள ஒரு கோயிலில் வைத்து ரகசிய திருமணம் செய்துகொண்டார்.

அடுத்த சில நாட்களில் மகள் மோனிஷாவிற்கு திருமணம் ஆனதை அறிந்த அவரது பெற்றோர், அவரது “தாயாருக்கு உடல் நிலை சரியில்லை” என்று கூறிவிட்டு, திருமணமான நாளிலே அழைத்துச் சென்று உள்ளனர். 

இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு மோனிஷாவின் வீட்டுக்குச் சென்ற மகேஷ், “என் மனைவியை அனுப்பி வைக்க வேண்டும்” என்று, அவரது பெற்றோரிடம் கேட்டு உள்ளார். ஆனால், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால், குடியாத்தம் காவல் நிலையத்திற்குச் சென்று அவர் புகார் அளித்து உள்ளார்.

இதனையடுத்து, இந்த புகார் தொடர்பாக “முகேஷ், மோனிஷா” இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். 

அப்போது, போலீசார் விசாரணையில் பதில் அளித்த மோனிஷா, “என்னை மிரட்டி முகேஷ் திருமணம் செய்துகொண்டதாக” கூறியுள்ளார்.

இதனையடுத்து, அவர்கள் இருவருக்கு போலீசார் அறிவுரை கூறி, இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

இதனால், கடும் கோபம் அடைந்த முகேஷ், ரகசியமாகக் காதலியின் வீட்டுக்குள் புகுந்து மறைந்திருந்து உள்ளார்.

அப்போது, வீட்டிற்குள் மறைந்து நின்றுக்கொண்டிருந்த முகேஷை, சந்திரசேகர் பார்த்து சத்தம் போட்டு உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்திரசேகரை சரமாரியாகக் குத்தி உள்ளார்.

இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். இதனையடுத்து, அவரது மனைவி சசிகலாவையும், வீட்டிலிருந்த 2 வது மகளையும் சரமாரியாகக் கத்தியால் குத்தி உள்ளார். 

அப்போது, அவர்கள் எல்லாம் சேர்ந்து உதவிக்கு ஆட்களை அழைத்து சத்தம் போட்டு உள்ளனர். பக்கத்து வீட்டில் இருந்து வந்த அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். 

அப்போது, அந்த வீட்டின் மாடிக்கு ஓடிச் சென்ற முகேஷ், அங்கிருந்து கீழே குதித்து உள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின் கம்பியில் அவர் சிக்கிய நிலையில், அவர் அப்படியே மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு உள்ளார். 

இதில், அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, அந்த பகுதி மக்கள், கத்தியால் குத்தப்பட்ட 3 பேரையும், கத்தியால் குத்திய முகேஷையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, அவர்கள் 4 பேருக்கும் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 4 பேரும் தற்போது உயர் சிகிச்சைக்கா வேலூர் மற்றும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த குடியாத்தம் போலீசார், அந்த வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதன் படி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, கத்தியால் குத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி, கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.