சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி, தமிழக பாஜகவின் மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தனக் கடத்தல் வீரப்பன், பல ஆண்டுகளாகத் தமிழகம், கருநாடகம், கேரளா ஆகிய 3 மாநில அரசுகளுக்கு 
பெரும் சவாலாகத் திகழ்ந்தார். பல லட்சம் மதிப்பிலான சந்தன மரங்களைக் கடத்தியதாகவும், யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை கடத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

இதனையடுத்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார் சந்தனக்கடத்தல் வீரப்பன்.  

அதன் பிறகு சந்தன கடத்தல் வீரப்பனின் மகள்களான விஜயலட்சுமி, வித்யாராணி ஆகிய 2 மகள்களையும் அவரின் தாயார் முத்துலட்சுமி தான் படிக்க வைத்து வளர்த்து வந்தார்.

இதில், வித்யா ராணி வழக்கறிஞராக உள்ள நிலையில், இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்னை வியாசர்பாடியில் கணவருடன் வசித்து வரும் வித்யாராணி, கடந்த பிப்ரவரி மாதம், கிருஷ்ணகிரியில் நடந்த பாஜக கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் அவர் பாஜகவில் சேர்ந்தார். பாஜகவில் சேர்ந்தது முதல், அவர் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் புதிய பாஜக நிர்வாகிகள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது. இதில், சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி, தமிழக பாஜகவின் மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், நடிகர் ஆர்.கே. சுரேஷ் - மாநில ஓபிசி பிரிவு துணைத் தலைவராகவும், இயக்குநர் பேரரசு, இசை அமைப்பாளர் தீனா ஆகியோர் பாஜக கலை கலாச்சார பிரிவு மாநிலச் செயலாளர்களாகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். 

மேலும் நடிகர்கள் ராதா ரவி, விஜயகுமார், பாடகர் கங்கை அமரன் ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்து உள்ளார்.

அதேபோல், மாநில பிற மொழி பிரிவு துணைத் தலைவராக தீப்தி சங்கவி, பிற மொழி பிரிவு மாநில செயலாளர்களாக அங்கிட் அகவர்வாலும், ஜித்தேந்திரன், கிருஷ்ணா நந்திணி உள்ளிட்டோரும் தற்போது புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.