பழனியில் இடத் தகராறில் தியேட்டர் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்திருந்த நிலையில், அதில் சுப்பிரமணி என்பவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தார். இதனால், அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இடத் தகராறு காரணமாக, தியேட்டர் உரிமையாளரான 80 வயதான நடராஜன், தான் வைத்திருந்த கைத் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்து, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இதில், படுகாயம் அடைந்தவர்களில் 72 வயதான பழனிச்சாமி என்பவருக்கு, தொடைப் பகுதியில் குண்டு பாய்ந்த நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து உடலில் இருந்த குண்டை அகற்றினார்கள். 

அதே போல், மற்றொரு நபரான ராமபட்டினம் புதூரைச் சேர்ந்த 57 வயதான சுப்பிரமணி என்பவருக்கு, மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் உயிர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டார். 

மதுரை அரசு மருத்துவமனையில் சுப்பிரமணியனுக்கு தீவிரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், அவரின் மார்பு பகுதியில் இருந்த குண்டை அகற்றினர். எனினும், சிகிச்சைப் பலனின்றி சுப்பிரமணியன் நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். 

துப்பாக்கிச் சூட்டில் முதியவர் சுப்பிரமணி உயிரிழந்ததால், இந்த வழக்கு கொலை முயற்சி வழக்கிலிருந்து கொலை வழக்கமாக மாற்றப்பட்டது. 

இதனையடுத்து, துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டு கைதான தியேட்டர் உரிமையாளரான 80 வயதான நடராஜன், நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, நடராஜனை பழனி கிளை சிறையில் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, நடராஜன் பழனி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

அதாவது, தியேட்டர் அதிபரான 80 வயதான நடராஜனுக்கு, பழனி பீடர் ரோட்டில் உள்ள 12 ½ சென்ட் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் இருந்து உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில் இளங்கோவன் என்பவர் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதற்காக அவரது தரப்பினர், அந்த நிலத்தைச் சுத்தப்படுத்தும் பணியில் நேற்று காலையில் ஈடுபட்டனர்.

அப்போது, இளங்கோவனின் மகன் மது பிரகாஷ் மற்றும் அவருடைய உறவினர்களும், விவசாயிகளுமான பழனி கவுண்டன்குளம் பகுதியைச் சேர்ந்த 72 வயது பழனிசாமி மற்றும் அங்குள்ள சத்திரப்பட்டி அருகே  உள்ள ராமப்பட்டினம் புதூரை சேர்ந்த 57 வயதான சுப்பிரமணி உள்ளிட்டோர் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அந்த நேரம் பார்த்து அங்கு வந்த நடராஜன், அவர்கள் மேற்கொள்ளும் சுத்தம் செய்யும் பணி குறித்து, இளங்கோவனின் உறவினர்களிடம், கேட்டு உள்ளார். 

இதனால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில், கடும் ஆத்திரம் அடைந்த முதியவர் நடராஜன், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுப்ரமணி மற்றும் பழனிச்சாமியை சுட்டு உள்ளார். இதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். அத்துடன், நடராஜன் துப்பாக்கியால் சுடும் போது, அங்கிருந்த மற்றொரு முதியவர், அவரை அங்கு கிடந்த கல்லை எடுத்துத் தாக்கினார். இதில், அவரது கையில் அந்த கல் பட்டு காயம் அடையவே, தான் வந்த இருசக்கர வாகனத்தில், நடராஜன் தன் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றதும், அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனைக் கைப்பற்றிய போலீசார். நடராஜனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.