“மழைக்காலத்தில் பேருந்தின் உள்ளே ஒழுகியது மழைநீரா? அல்லது அரசின் ஊழலா? என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தற்போது வடகிழக்கு பருவமழையும் சக்கை போடு போட்டு வருகிறது. 

இது போதாது என்று, தமிழ் நாட்டில் இன்னும் 6 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழக அரசியல் களமும் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. பாஜக வேல் யாத்திரை, மு.க. அழகிரி, தொண்டர்களுடன் ஆலோசனை என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கிட்டத்தட்டத் தேர்தல் பரப்புரைகளைத் தற்போது தொடங்கி விட்டார்கள் என்றே கூறலாம். இதனால், தமிழக அரசியல் களங்கள் தற்போது தீவிரமடைந்து வருகிறது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நடிகராக இருந்து அரசியல் கட்சித் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார். 

ஆனால், அதே நேரத்தில் நடிகர் கமல்ஹாசன், அந்த மேடையை தனக்கே உரித்தான அந்த நக்கல் நையாண்டி பாணியில் தனது அரசியல் பயணித்தற்கான லாவகமாகவும், அவர் மிகவும் நுணுக்கமாகப் பயன்படுத்தி வருகிறார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், தமிழ் நாட்டில் தொடங்கி உள்ள வட கிழக்கு பருவமழையால், தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருவதால், குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகள் கன மழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது.

கன மழை பெய்யும் சமயங்களில் இந்த மழைக் காலங்களில் அரசுப் பேருந்துகளில் ஒழுகும் மழை நீரை மையமாகக் கொண்டு, கமல்ஹாசன், மாநிலத்தில் ஆளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசைக் கடுமையாக விமர்சிக்கும் வகையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்து உள்ளார்.

அந்த பதிவில், “புத்தம் புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடை பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள். உள்ளே ஒழுகியது மழைநீரா? ஊழலா? பயணிகள் பிடித்தது குடையா? ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?”  என்று சினிமா ஸ்டைலில், நச் நச் என்று, அரசியல் கேள்வியால் விமர்சன கத்தியை வீசி எரிந்திருக்கிறார். இதனை, தமிழக எதிர்க் கட்சிகள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதனால், கமல்ஹாசனின் இந்த டிவிட்டர் பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது. 

முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக அரசை விமர்சித்திருந்த கமல்ஹாசன், “மக்களை கை கழுவச் சொன்ன அரசு, இப்போது மக்களையே கை கழுவி விட்டது ஏன்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். 

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், “ நீட் நுழைவு தேர்வு விவகாரத்தில் மத்திய அரசை வழிக்குக் கொண்டு வராமல், மாணவர்களுக்கு முறையான பயிற்சி தன்னம்பிக்கை தரத் தவறிய இந்த அரசால், இன்னும் எத்தனை மரணங்களைத் தமிழகம் தாங்கும்?” என்றும், கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்துடன், “நிவாரணம் வாயிலாக பிரச்சினையை மூடி மறைக்க நினைக்கின்றனர்” என்றும், அதிமுகவை அவர் பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்தார்.

மேலும், “விவசாயிகளுக்கான உதவித் தொகையை உண்மையான பயனாளிகளுக்கு சேர்க்க தவறியதன் வாயிலாக, தன் ஊழல் முகத்தை கொரோனா காலத்தில் கூட அரசு காட்டுவது முறையா? என்றும், ஆன்லைன் கல்வி முறையில் எந்த திட்டத்தையும் முறையாகச் செயல்படுத்தாமல் அலட்சியப் போக்கு காட்டியுள்ளது தமிழக அரசு என்றும், மக்களை கை கழுவச் சொன்ன அரசு, இப்போது மக்களையே கை கழுவி விட்டது” என்றும், பகிரங்கமாகவே நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.