சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியை 
ஏற்றினார்.

நாட்டின் 74 வது சுதந்திர தினத்தையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையைத் திறந்த ஜீப்பில் சென்று ஏற்றார். அப்போது, சென்னை காவல் துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர்.

சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. அங்கு, பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளர் சண்முகம், முதலமைச்சர் பழனிசாமி வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் பழனிசாமி, சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, மூவர்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. 

அத்துடன், காவல் துறை இசை வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். இதனைத் தொடர்ந்து, சுதந்திர தின உரையை முதலமைச்சர் பழனிசாமி நிகழ்த்தினார்.

அப்போது, 4 வது முறையாகத் தேசியக்கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைகிறேன்” என்று, முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

“நாட்டுக்காக உழைத்து சுதந்திரம் வாங்கித் தந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் 16 ஆயிரத்தில் இருந்து, 17 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக” முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

மேலும், “சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசு தாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் 8 ஆயிரத்தில் இருந்து, 8,500 ஆக உயர்த்தப்படும்” என்றும், முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

 “வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது திட்டத்தின் மூலம் 64, 661 வெளிநாட்டுத் தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் குறைவாகவே உள்ளதாகவும்” சுட்டிக்காட்டினார்.
 
“தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ளப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சையும் 
அளிக்கப்பட்டு வருகிறது” என்றும் அவர் கூறினார்.

“அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை அளித்தார்.

அத்துடன், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்றும், விரைவில்  திறக்கப்படும்” என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 

“மக்களின் அன்பு, ஆதரவைப் பெற்றுள்ள நான் மக்களின் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளேன் என்றும், அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன்” என்றும், முதலமைச்சர் பழனிசாமி சூளுரைத்தார்.

சுதந்திர தின உரையைத் தொடர்ந்து, பல்வேறு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி, விருதுகளை வழங்கி கவுரவித்தார்.அதன்படி, நல் ஆளுமைக்கான விருதைத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். 

அதேபோல், மருத்துவ சேவை கழகத்திற்கான நல் ஆளுமை விருதைப் பெற்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். மருத்துவர் செளமியா சுவாமிநாதனுக்கு கோவிட் 19 க்கான சிறப்பு விருதை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி. 

நுண்ணீர்ப்பாசனத்தில் சிறந்து விளங்கும் வேளாண் துறைக்கு நல் ஆளுமை விருது வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் பழனிசாமி.

மேலும், ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் விருதானது, கல்வியாளர் ஆனந்தம் செல்வகுமாருக்கு வழங்கப்பட்டது. விருதுடன், 5 லட்சம் ரூபாய்கான காசோலையையும்  முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

இதனிடையே, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றினார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.