அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என விவாதம் எழுந்துள்ள நிலையில், மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வரும் நிகழ்வு, அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் 8 மாதங்களே உள்ளன. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதால், அது தொடர்பான பணிகளை பல கட்சிகளும் இப்போதே தொடங்கி விட்டது போலத்தான் தமிழகத்தின் அரசியல் கட்சியின் செயல்பாடுகள் தற்போது பரபரப்பைக் கிளப்பி இருக்கின்றன.

குறிப்பாக, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை இப்போது, அந்த கட்சிகள் பூதாகாரமாக வெடித்துள்ளது. 
அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து ஒன்றைத் தெரிவித்தார். இதற்குப் பதில் அளிக்கும் விதமாகப் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் முதலமைச்சர் பழனிசாமி தான்” என்று, வெளிப்படையாகவே பேசினார். இந்த இருவரின் கருத்துக்களும் தான், தற்போது அந்த கட்சியில் புயலைக் கிளப்பி இருக்கிறது. 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்தைத் தொடர்ந்து, அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து, அக்கட்சியின் முக்கிய மூத்த அமைச்சர்களே தொடர்ந்து தங்களது கருத்துக்களை முன் வைத்து வந்தனர்.

அதன்படி, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல என்றும், கட்சியின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் சுமுகமான முடிவு எடுக்கப்படும்” என்றும் உறுதிப்படத் தெரிவித்தார். 

“கட்சி, சின்னத்தை முன்னிலைப்படுத்தித் தேர்தலைச் சந்திப்போம் என்றும், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சி உரிய நேரத்தில் முடிவெடுக்கும்” என்றும், அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுப் பேசினார். 

இதன் தொடர்ச்சியாகப் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்தித் தான் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டும்” தெரிவித்தார். 

“முதலமைச்சர் பழனிசாமி தலைமையையே மக்கள் விரும்புகிறார்கள்” என்றும் குறிப்பிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், 
ஓ.பி.எஸ். வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும்” என்றும், உறுதிப்படத் தெரிவித்தார். 

அதிமுகவுக்குள் இப்படி ஒரு குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, கடந்த சில நாட்களுக்கு முன் பேசும் போது, “வருகிற தமிழகச் சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக - பாஜக  இடையேதான் போட்டி என்றும், பாஜக தலைமையில்தான் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும்” என்றும், வெளிப்படையாகவே பேசி தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பினார்.

இந்த பேட்டி, அதிமுக தலைமைக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்தது. அத்துடன், அதிமுகவில் தற்போது உள்ள சிக்கலைப் பயன்படுத்தி, வரும் தேர்தலில் பாஜக அதிக சீட்டுகளை எதிர்பார்த்துக் காத்திருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி மற்றும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, “வரும் சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை அறிவிக்க வேண்டும்?” என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, தேர்தல் வரும் போது அறிவிக்கலாம் என்ற முடிவோடு அந்த கூட்டம் நிறைவடைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் பாதியிலேயே முடிந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், “தமிழகத்தில் அடுத்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தான்” என, அவரது தொகுதியான போடி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டதுடன், தேனியில் உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் அதிமுகவில் இன்று அதிகாலை முதலே பரபரப்பு ஏற்பட்டது. அதில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், அந்த போஸ்டரில் இடம் பெற்று இருந்தது.

இந்நிலையில், இந்த பிரச்சனை அக்கட்சியில் விஸ்வரூபம் எடுத்தது. இதனால், மூத்த அமைச்சர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமாரின் அறையில் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதில், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அத்துடன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.பி. அன்பழகன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.சி. வீரமணி, பெஞ்சமின் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். 

மேலும், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என விவாதம் எழுந்துள்ள நிலையில், மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், செங்கோட்டையன், மாஃபா பாணடியராஜன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், காமராஜ், உடுமலை கே. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, கட்சியின் மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த கூட்டத்திற்குப் பிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்களும் ஒன்றாகச் சேர்ந்து செய்தியாளர்கள் முன்னிலையில், தங்களது கருத்துக்களை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.