நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பினால் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்,  மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.   

ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் அம்மாநிலத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மக்களின் சூழலைப் புரிந்து கொண்டு, மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செய்து வருகிறார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. மற்ற மாநில மக்கள், நமக்கு இதுபோன்ற ஓர் முதலமைச்சர் கிடைக்கவில்லையே என்று பொறாமைக் கொள்ளும் அளவிற்கு அவரின் ஆட்சி அங்குச் சிறப்பாக நடைபெற்று வருவதைக் காணமுடிகின்றது. இதை உறுதிச் செய்கின்ற வகையில், தற்போது ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் யாரவது உயிரிழந்தால், அவரின் இறுதிச்சடங்கிற்காக அவரின் குடும்பத்தாருக்கு உடனடியாக ரூ.15 ஆயிரம் ஆந்திர அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
 
சில நாட்களாகவே இந்தியாவின் பல்வேறு இடங்களில் 
கொரோனா நோயால் இறந்தவர்களின் உடல்களை மருத்துவப் பணியாளர்கள் மோசமான முறையில் கையாள்கிறார்கள். அதாவது, மண் அள்ளும் எந்திரத்தின் மூலம் கொண்டு சென்றும், டிராக்டரில் கொண்டு சென்றும் புதைக்கிறார்கள் என்று தெரிந்து, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கவலைத் தெரிவித்தார். தற்போது இந்த புதிய அறிவிப்பை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டுள்ளதைப் பலரும் வரவேற்றுள்ளனர்.

ஆந்திரப் பிரதேசத்தில் தற்போது (15/07/2020) வரை கொரோனா பாதிப்புகளால் பலியானோர் எண்ணிக்கை 408 ஆக உள்ளது.  33,019 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதுவரை 17,467 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  15,144 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று (15/07/2020) நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சருமான அலா நானி, தலைமைச் செயலாளர் நீலம் ஷானே, டிஜிபி கவுதம் சாவாங், மருத்து மற்றும் சுகாதார சிறப்புச்செயலாளர் கே.எஸ். ஜவஹர் உள்ளிட்டர் பங்கேற்று, சில முக்கிய முடிவுகளை எடுத்தனர். 
ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஆந்திராவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு, அவரின் இறுதிச்சடங்கிற்காக உடனடியாக ரூ.15 ஆயிரம் அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.  

அதேபோல், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு ஏதேனும் புகார்கள் வந்தால், அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், அந்த மருத்துவமனையின் உரிமமும் ரத்து செய்யப்படும். 

தனிமைப்படுத்தும் முகாம்களில் இருக்கும் அனைவருக்கும் சுகாதாரமான சூழல், தரமான உணவுகள், மருந்துகள், சிகிச்சைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகக் கால்சென்டர் ஒன்றை உருவாக்கி, அதில் கொரோனா மையங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகள், தனிமைப்படுத்தும் முகாம்களில் இருப்பவர்கள் குறைகளைப் பதிவு செய்து அதில் எத்தனை நீக்கப்பட்டுள்ள என்பதையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மேலும், ஒவ்வொரு கொரோனா மருத்துவமனை மையத்திலும் கால்சென்டர் தொலைப்பேசி எண்ணை மக்கள் அறியும் வகையில் தெரியப்படுத்த வேண்டும்.

கொரோனா வைரஸுக்காக ஆந்திர அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள், ஒருவருக்கு கரோனா அறிகுறி இருந்தால் அவருக்குச் செய்யப்படும் பரிசோதனைகள், அளிக்கும் சிகிச்சைகள், மேற்கொள்ளும் பரிசோதனைகள் ஆகியவை குறித்து மக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு செய்ய வேண்டும்.

கொரோனோவிற்காக செய்யப்படும் அனைத்து பரிசோதனைகளும் மத்திய சுகாதாரத்துறை, ஐசிஎம்ஆர் விதிமுறைப்படி செய்யப்படுகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

ஆந்திராவில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தற்போது 17 ஆயிரம் மருத்துவர்கள், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள் என மருத்து குழுவினர் முதல்வரிடம் தெரிவித்தனர். உடனடியாக அதற்குரிய செயல்திட்டத்தை உருவாக்கும்படி மருத்துவத்துறை செயலாளருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் முதல்வர் உத்தரவிட்டார்.

தற்போது ஆலோசிக்கப்பட்ட இந்த முடிவுகள் அனைத்தையும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

- பெ. மதலை ஆரோன்