மாணவிகளை சுற்றுலா அழைத்துச் சென்றபோது, ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றும் 57 வயதான அறிவியல் ஆசிரியர் நாராயண பிரசாத், மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதாகவும், அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.  

Nagapattinam college girls sexual harassment

இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியருக்குத் தெரியாமல் சில மாணவிகளை சுற்றுலா அழைத்துச் சென்ற ஆசிரியர் நாராயண பிரசாத், மாணவிகளிடம் அங்கு சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 

மேலும், “இது குறித்து வெளியில் சொன்னால், செய்முறைத் தேர்வு மதிப்பெண்களைக் குறைத்து விடுவேன்” என்றும் ஆசிரியர் மிரட்டி வந்துள்ளார்.

இதனால், பயந்துபோன மாணவிகள், ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து யாரிடமும் சொல்லாமல் பயத்தில் அமைதியாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், பள்ளியில் செய்முறை தேர்வு மதிப்பெண் தற்போது வழங்கப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும், ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். 

இதனால், அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள், இது தொடர்பாக, பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இந்த புகார் மீது உரிய விசாரணை நடத்துமாறு மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரனிடம் பள்ளி தலைமை ஆசிரியர், கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, ஆசிரியர் நாராயண பிரசாத்திடம் கல்வித்துறை அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆசிரியர் நாராயண பிரசாத் மீது நடவடிக்கை பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.