விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு நடத்திய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், 8,466 பயனாளிகளுக்கு ரூ.45.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அதன்பின்னர் பேசிய முதல்வர், ``தற்போது, ஸ்டாலின் மலிவான அரசியல் செய்கிறார். முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதை ஸ்டாலின் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கூட, அடுத்த தேர்தலிலே நிற்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அவருடைய தேர்தல் வழக்கு ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அது எப்படி முடிவுக்கு வருமென்று தெரியவில்லை. ஆக, முடிவு வேறுவிதமாக இருந்தால், அவர் ஆறு வருடத்திற்கு தேர்தலில் நிற்கமுடியாது. அவருடைய கனவு பலிக்காது. நல்ல எண்ணம் படைத்தவராக இருந்தால், நல்ல தீர்ப்பு கிடைக்கும். தீய எண்ணம் கொண்டவராக இருந்தால் ஆண்டவன் பார்த்துக்கொள்வார்” என்று பேசியிருந்தார். 

முதல்வரின் வார்த்தைகளுக்கு பதிலளிக்கும் வகையில், மு.க.ஸ்டாலின் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது :

``அதிகார துஷ்பிரயோகம் செய்து, பெருமளவு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது தொடர்பான ஊழல் வழக்கிற்காக, உயர்நீதிமன்றத்தால் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்தியாவின் ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவர், “தேர்தல் வழக்கு வேறுவிதமாக அமைந்தால் ஸ்டாலின் 6 வருடம் தேர்தலில் நிற்க முடியாது” என்று பேசி, எந்நாளும் நிறைவேறவே முடியாத தன்னுடைய அரசியல் பேராசையை வெளிப்படுத்தி இருக்கிறார். விரக்தி விளிம்பின் ஓரத்திற்கே சென்று விட்ட பழனிசாமி, இன்னும் சில மாதங்கள் கழித்து, தனது ஊழல்கள் கோப்புகளுடனான சான்றுகளுடன், வெளிச்சத்திற்கு வரும் என்று எண்ணி,எண்ணி நடுங்கிக் கொண்டிருக்கிறார். 

லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையில், மூட்டை கட்டி ஒரு மூலையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 3000 கோடி ரூபாய்க்கு மேலான நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு, தன்னை ஜெயிலுக்கு அனுப்பி விடும் என்று அல்லும் பகலும் அஞ்சுகிறார்; அதை நினைத்து நினைத்து நிலை குலைந்து நடுங்குகிறார்; நிம்மதியையும் நித்திரையையும் இழந்து, அதை மறைக்கக் குரல் உயர்த்திப் பேசுகிறார். தான் மட்டுமின்றி - தனது அமைச்சர்கள் செய்த ஊழல் - அந்த ஊழலில் தனக்கு வந்த பங்கு எல்லாம், மே மாதத்திற்குப் பிறகு தமிழகத்தின் கடை வீதிகளுக்கு வந்து நாற்றமெடுக்கப் போகிறதே என்ற பயத்தில் - பிதற்ற ஆரம்பித்து விட்டார் பழனிசாமி. 

இன்னும் தேர்தல் அறிவிப்பு வெளிவந்து - நேரம் நெருங்க நெருங்க - பல உளறல்களை - ஆணவப் பேச்சுக்களை - கூச்சல்களை பழனிசாமியின் அரசு விழா மேடைகளில் மட்டுமின்றி - அரசியல் மேடைகளிலும் அனுதினமும் பொதுமக்கள் கண்டு களிக்கலாம் என்பதற்கு முன்னோட்டப் பயிற்சியே இந்தப் பேச்சு. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு மேல்முறையீடு பற்றித் தீர்ப்பு வழங்குவது போல் பேசியிருக்கிறார் முதலமைச்சர். தீர்ப்பு எப்படி வர வேண்டும் என்ற ஆணவம் இந்தப் பேச்சில் எதிரொலிக்கிறது. 

முதலமைச்சருக்கு இந்த ஆணவத்தைக் கொடுத்தது எது ? அடித்துக் குவித்துச் சேமிப்புக் கிடங்கில் அடைத்து வைத்துள்ள ஊழல் பணமா? என்ற கேள்வி எழுகிறது. கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கைப் பொறுத்தவரை, ஏற்கனவே உயர்நீதிமன்றம் 549 பக்கம் விரிவாகத் தீர்ப்பளித்து - நான் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று கூறிவிட்டது. என் மீது தோற்றுப் போன வேட்பாளர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று, ஒவ்வொரு குற்றச்சாட்டு வாரியாக விசாரித்து - வாதப் பிரதி வாதங்களைக் கேட்டு விரிவாகத் தீர்ப்பளித்து விட்டது. அந்தத் தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டைச் சுட்டிக்காட்டி, ஒரு முதலமைச்சர், உச்சநீதிமன்றத்திற்கே கட்டளை பிறப்பிக்கும் வகையில், அதுவும் அரசு விழாவில் நின்று கொண்டு அறைகூவல் விடுத்துப் பேசுவது உச்சக்கட்டமான நீதிமன்ற அவமதிப்பு. இதை அறிந்து பேசுகிறாரா, அல்லது அறியாமையால் பேசுகிறாரா? 

“நம் ஊழல்களை” பட்டி தொட்டியெல்லாம் ஸ்டாலின் கொண்டு போய்ச் சேர்க்கிறாரே; பொதுமக்களும் புரிந்துகொண்டு, பொருத்தமான தண்டனை தரக் காத்திருக்கிறார்களே என்ற மனக் கலக்கம். தனது சம்பந்தியின் உறவினர்களுக்கு, தன் சொந்தத் துறையிலேயே ஒப்பந்தம் கொடுத்த வழக்கில், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வைத்து விட்டாரே ஸ்டாலின் என்ற கொந்தளிப்பு, கோபம்.6 ஆயிரம் கோடி ரூபாய் கொரோனா ஊழலில் வசமாகச் சிக்கிக் கொண்டிருக்கிறோமே என்ற அச்சம். எல்லாவற்றிற்கும் மேலாக, அ.தி.மு.க. அடையப் போகும் படுதோல்வி, அவரது முகத்தில் பெரிய எழுத்துகளில் வரையப்பட்டிருக்கிறது. 

வரப் போகின்ற தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாது. திமுகவைப் பொறுத்தவரை, வழக்குகளைச் சட்ட ரீதியாகச் சந்தித்து - உண்மைகளை நீதிமன்றத்தில் எடுத்து வைத்து வெற்றி பெற்று வரும் இயக்கம். அப்படித்தான் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான “குட்கா உரிமை மீறல் நோட்டீஸ்” உள்படப் பல வழக்குகளையும் திமுக எதிர்கொண்டு வருகிறது. சட்டத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஆகவே பொய் வழக்குகள் - ஆதாரமில்லாத வழக்குகளைச் சட்ட ரீதியாகத் திமுக சந்திக்கும். எங்களைப் பொறுத்தமட்டில், இப்போது ஊழல் பெருச்சாளிகளின் சங்கமமாக இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியைத் தூக்கியெறிந்து, தமிழகத்தைக் கொடுங்கோலர்களிடமிருந்து மீட்க வேண்டும்; தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும்; தமிழகத்தின் வளர்ச்சியை, 50 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய மோசடிப் பேர்வழிகளின் முகத்திரையை பொது வெளியில் கிழித்தெறிய வேண்டும்; இதுதான் எங்கள் இலக்கு. 

அந்த இலக்கை அடைய நாங்கள் தமிழக மக்களை நாள்தோறும் நாடுகிறோம். மக்களுக்காகப் பாடுபட இயன்ற அனைத்தையும் செய்கிறோம். முதலமைச்சர் பழனிசாமி போல், அரசு கஜானாவைச் சுரண்டிக் கொண்டிருக்கவில்லை; கரன்சி மலையைக் குவித்துக் கொண்டிருக்கவில்லை. உங்களுக்குத் தொழில், ஊழல் ஒன்றே எமக்குத் தொழில். மக்கள் பணி, தமிழ்ப் பணி, தமிழர்க்கான நற்பணி, தித்திக்கும் திராவிட இயக்கப் பணி.நமக்குத் தொழில் கவிதை; நாட்டுக்கு உழைத்தல் என்று பாரதி சொன்னதைப் போன்றது எமது பணி. மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள திமுகவின் வெற்றியை, கடைகளை எல்லாம் அடைத்து விட்டுச் செய்யும் தீய-பொய்ப் பிரச்சாரங்களின் வாயிலாகத் திசை திருப்பி விட முடியாது.மே மாதத்திற்குப் பிறகு பழனிசாமியும் - அவரது சகாக்களும் இருக்க வேண்டிய இடம் எது என்பதை மக்கள் ஏற்கனவே முடிவு எடுத்து விட்டார்கள். பழனிச்சாமியின் ஆட்சிக்கும், முதலமைச்சர் பதவிக்கும் கவுன்ட் டவுன் மணியை மக்கள் அடித்து விட்டார்கள்"

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.