கன்னியாகுமரி அருகே விஜயகாந்த் சினிமா பாணியில் கணவனும், மாமியாரும் சேர்ந்து மனைவியை கொல்ல முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜயகாந்த் நடித்த “ராஜ்ஜியம்” படத்தில், வில்லனின் மகன், தன் மனைவியின் உடம்பில் மருந்து இல்லாத வெறும் ஊசியை செலுத்தி, அவருக்குச் செயற்கையாக மாரடைப்பு ஏற்பட வைத்து அவரை கொலை செய்வார். இதனை விஜயகாந்த் தான் கண்டுபிடிப்பார். அதே போன்று கன்னியாகுமரி அருகே மனைவியை, கணவனும் - மாமியாரும் சேர்ந்து கொலை செய்ய முயன்றுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அடுத்துள்ள களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஜாஸ்பின் ஷைனி என்ற பெண், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. முதல் திருமணம், விவாகரத்தில் முடிந்ததால் அவருக்கு 2 வதாக திருமணம் செய்ய முடிவு செய்து, அவருக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.

அதன்படி, மார்த்தாண்டம் அருகேயுள்ள 40 வயதான மெர்லின் ஜெபராஜ் என்பவருக்குக் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி 2 வது திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, தன்னுடைய முதல் குழந்தையுடன் கணவர் வீட்டிற்கு வந்து வாழ்ந்து வந்தார்.

ஆனால், திருமணம் ஆன அடுத்த நில வாரங்களிலேயே மெர்லின் ஜெபராஜ், மனைவியையும் அவருடைய குழந்தையையும் கொடுமைப் படுத்தி அடித்துத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கணவனின் கொடுமை தாங்காமலும், தன்னுடைய 2 வது வாழ்க்கையும் இப்படி அமைந்து விட்டதே என்று மனதில் நொந்துக்கொண்ட அந்த பெண், ரொம்பவும் பொறுமை காத்து வந்துள்ளார்.

இதனையடுத்து, கொடூரத்தின் உச்சமாக தன் மனைவியை அவரது கணவர் மெர்லின் ஜெபராஜ், கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். 

அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு உணவு சாப்பிட்ட ஜாஸ்பின் ஷைனி, அதன் பிறகு தூங்கச் சென்றுள்ளார். அப்போது, அவரது மாமியார் ஜாஸ்பின் ஷைனிக்கு ஜூஸ் கொடுத்துள்ளார். அதைக் குடித்த ஜாஸ்பின் ஷைனி அடுத்த சில நிமிடங்களில் மயங்கி உள்ளார்.

ஜாஸ்பின் ஷைனி மயங்கிப் பிறகு, அவரது கணவர் மருந்தில்லாத வெறும் ஊசியை அவரது இடுப்பில் 2 முறை குத்தி உள்ளார். அப்போது தான், மாரடைப்பு ஏற்பட்டு, அவர் உயிரிழப்பார் என்றும், இதனால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது என்றும் அவர் நினைத்துள்ளார்.

ஆனால், மறுநாள் காலை பயங்கர இடுப்புவலி ஏற்பட்டு ஜாஸ்பின் ஷைனி கடும் அவதிப்பட்டுள்ளார். எனினும், அந்த வலிகளோடு வீட்டு வேலைகளை அவர் செய்துள்ளார். அப்போது, கணவன் - மனைவி இடையே மீண்டும் சண்டை வந்துள்ளது. ஒரு பக்கம் இடுப்பு வலி, மறுபக்கம் கணவனின் டார்ச்சர் என்று வெறுத்துப்போன ஜாஸ்பின் ஷைனி, தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.

அம்மா வீட்டிற்கு வந்ததும், அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்ததால், அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு ஜாஸ்பின் ஷைனியை பரிசோதித்த மருத்துவர்கள், ஜாஸ்மின் ஷைனியின் உடலில் ஊசி மூலம் காற்று செலுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், ஜாஸ்பின் ஷைனி மற்றும் அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது, ஜாஸ்பின் ஷைனி யோசித்துப் பார்த்த போது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் தன் மாமியார் ஜூஸ் கொடுத்ததும், அதன் பிறகு தனக்குத் தலை சுற்றியதையும், அந்த பெண் மருத்துவர்களிடம் கூறி உள்ளார். அதன் பிறகு தான், இந்த ஊசி போடப்பட்டிருக்க முடியும் என்பதையும் மறுத்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால், பயந்துபோன ஜாஸ்பின் ஷைனி மற்றும் அவரது பெற்றோர் இது தொடர்பாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மெர்லின் ஜெபராஜிடம் விசாரணை நடத்த அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது, அவரது வீடு பூட்டப்பட்டு அவர் குடும்பத்துடன் தலைமறைவானது தெரிய வந்தது.

இதனையடுத்து, மனைவியை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக கணவர் மெர்லின் ஜெபராஜ், மாமியார் ஜெஸ்டின் பாய், மாமானார் சவுந்தர்ராஜ் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.