நாடு முழுவதும் 4 ஆம் கட்ட ஊரடங்கு 18 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஊடுருவிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதலில் 21 நாட்கள், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கொரோனாவின் தீவிரத்தால் அடுத்தடுத்து  மொத்தம் 3 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. 

Coronavirus Lockdown Extension in Tamilnadu

இதனிடையே, 3 வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, வரும் 17 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “உலக நாடுகள் யாவும் கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்து, கடந்த 4 மாதங்களுக்கும் மேலாகப் போரிட்டு வருவதாக” குறிப்பிட்டார். 

“அனைத்து நாடுகளிலும் 42 லட்சத்துக்கும் மேலாக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், உலகம் முழுவதும் 2.75 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளதாகவும்” அவர் கவலைத் தெரிவித்தார். 

“கொரோனாவுக்கு, இந்தியாவிலும் பல குடும்பங்களில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து உள்ளதாகக் கவலைத் தெரிவித்த பிரதமர் மோடி, அனைவரின் சார்பாக வேதனையைப் பகிர்ந்து கொள்வதாகவும்” குறிப்பிட்டார். 

“இந்த நெருக்கடி நிலை என்பது, மனித இனம் இதுவரை நினைத்துப்பார்க்காத, கேள்விப்படாத ஒன்றாக உள்ளதாகவும், நம்மை நாமே பாதுகாத்துக்கொண்டு மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும்” பிரதமர் சுட்டிக்காட்டினார். 

“இப்படிப்பட்ட இக்காட்டான சூழ்நிலையிலிருந்து நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றும், பாதுகாப்புடன் முன்னேறிச்செல்வது அவசியம் என்றும், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாம் தற்சார்புடன் இருக்க வேண்டும்” என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். 

Coronavirus Lockdown Extension in Tamilnadu

அத்துடன், “இதுதான் நாம் முன்னேறுவதற்கான ஒரே வழி என்றும், இந்தியாவின் தற்சார்புத் தன்மை உலகின் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் சமாதானத்தில் அக்கறை கொண்டு உள்ளது” என்றும் மோடி தெரிவித்தார். 

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவி வருவது கவலை அளிப்பதாக உள்ளதாக” குறிப்பிட்டார். 

“நாட்டில், கொரோனா பாதிப்புகளும், உயிர் இழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கவலைத் தெரிவித்த பிரதமர், கொரோனா தாக்கத்தில் மற்ற உலக நாடுகளைக் காட்டிலும், இந்தியா தனித்திருப்பதாகவும்” பிரதமர் கூறினார்.

“வேலைவாய்ப்பு மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாகவும் கூறிய பிரமர், நாடு முழுவதும் 4 ஆம் கட்ட ஊரடங்கு 18 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் 4 ஆம் கட்ட ஊரடங்கில் புதிய விதிமுறைகள் இருக்கும் என்றும், அது தொடர்பான விரிவான விளக்கங்கள் வரும் 18 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்” என்றும், பிரதமர் மோடி கூறினார்.