கடந்த 3 நாட்களாக, கேரளாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கேரளாவே துன்பத்தில் மூழ்கியுள்ளது. இதில், கடந்த 2 தினங்களாக வயநாடு பகுதிகளிலும் கேரள மாநிலம் இடுக்கி பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக வயநாடு முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குடியிருப்பு பகுதிகள், ஆறுகள் உள்ளிட்டவைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் நேற்று முழுவதுமாக பெய்த கனமழையால் கேரள மாநிலம் மூணாறு மாவட்டத்தில் ராஜமலை என்ற பகுதியில் பெரியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் புதைந்துள்ளன. இதில் சிக்கி 80 பேர் மாயமாகியுள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது. நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில் அங்கிருந்து தப்பி வந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் தற்போது ராஜமலை பகுதியில் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதிக்கு செல்லக்கூடிய பாலம் அடித்து செல்லப்பட்டிருப்பதால் மீட்புப்பணியினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இடுக்கி மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் சேற்றில் சிக்கியுள்ள 80 பேரை மீட்கும் பணியில் அதிகாரிகளும், வனத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள சேற்றுக்குள் 20 வீடுகள் புதையுண்டு உள்ளதாக மீட்புடையினர் இன்று காலை தகவல் தெரிவித்துள்ளனர்

கேரளாவின் இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு பகுதிகளில் வரும் 11ந்தேதி வரை தீவிர கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் ஆபத்து நிலையை குறிப்பிடும் சிவப்பு வண்ண எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இந்த நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ராஜமாலா பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.  இதில் சிக்கியவர்களில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதுவரை 10 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

சம்பவ பகுதிக்கு போலீசார், தீயணைப்பு துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளனர்.  மீட்பு பணியை துரிதப்படுத்தும்படி வனம் மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த நிலச்சரிவு காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டு நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இதனிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தேசிய பேரிடர் மீட்பு படையிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எத்தனை பேர் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியாததால், கேரளாவில் இன்னமும் பதற்றமே நிலவிவருகிறது. கொரோனா பேரிடர் நேரத்தில், பாதிப்பை கட்டுக்குள் வைத்திருந்த கேரள அரசுக்கு, இந்த நிலச்சரிவு அபாயம் மிகுந்த கவலையை அளித்துள்ளது.