மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடக்கும் போராட்டம் 112 நாட்களை எட்டியுள்ளது. தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் மூன்று மாதங்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், 112 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தில் இதுவரை  300 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளது. 

இறந்த விவசாயிகளை அனைவரும் பெரும்பாலும் கடும் குளிர், போராட்டத்தின் போது வாகன விபத்து , மாரடைப்பு ஆகியவற்றால் இறந்துள்ளனர். டெல்லியில் ஜனவரி மாதத்தில் கடும் குளிர் நிலவியது, போராட்டத்தில் கலந்துகொண்ட அதிகமான விவசாயிகள் வயது முதிர்ந்தவர்கள் என்பதால், குளிரை எதிர்கொள்ள முடியாமல், அவதிப்பட்டு வந்தனர். கடும் குளிரால் ஜனவரி மாதம் மட்டும் 108 விவசாயிகள் இறந்ததுள்ளனர். 

 மேலும் விவசாயிகள் போராடும் எல்லைப் பகுதியில் அவர்களுக்கு முறையான கழிப்பிட வசதிகள் கூட கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு எளிதாக மோசமான நோய்ப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் விவசாயச் சங்கங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசு இதுகுறித்து எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். 

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் 300 பேர் உயிரிழந்ததைக் குறிப்பிட்டு  #300DeathsAtProtest என்ற ஹாஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.